பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78


டாக்டரில்லா மருத்துவமனை
தோகையில்லா மயிலைப் போல

கட்டிடம் என்னதான் அழகாயிருந்தாலும், கருவிகள் எவ்வளவு இருந்தாலும் மருந்துகள் ஏராளமாக இருந்தாலும் டாக்டர்கள் இல்லாத மருத்துவமனை தோகையில்லாத மயிலுக்குச் சமானமாகும்,

இது குறித்து மருத்துவ இலாகா செயலாளர் அனந்தபத்மநாபனிடம் பேசினேன். தேவர்கள்கூட சங்கடம் வரும்போது அனந்த பத்மநாபனிடம்தான் போனதாகச் சொல்வார்கள். அவரிடம் இந்த மருத்துவமனைக்கு மருத்துவ நிபுணர்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று சொன்னேன். அவருடைய செயல் திறமையினால் இன்று 25 நிபுணர்கள் இங்கு வர ஏற்பாடு ஆகியுள்ளது.

இங்குள்ள மருத்துவர்களும் மற்றப் பணியாளர்களும் தொழிலாளர் மனம் நோகாது பணியாற்றி வருவார்கள் என்று நான் நம்புகிறேன். மருத்துவமனையில் தொழிலாளர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதுபற்றி டாக்டர் குரோனின் என்பவர் சிடாடல் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். அது ஏட்டோடு இருந்துவிட வேண்டும், நாட்டில் இல்லை என்ற அளவு கடமையோடும் திறமையோடும் பணிபுரியவேண்டும்.

வாழ்த்துரை
மட்டும் தானா...?

இத்திட்டத்துக்கு தொழிலதிபர்களும் தொழிலாளர்களும் பணம் தருகிறார்கள். இதன் மொத்த செலவில் முக்கால் பங்கை தொழிலாளர் ஈட்டுறுதி திட்ட நிறுவனமும் கால் பங்கை மாநில அரசும் வழங்குகிறது, மத்திய அரசு எதையும் வழங்குவதில்லை. இதை ஒரு குறையாகக் கூறவில்லை.