பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79


இந்த நல்ல காரியத்தில் அவர்களும் பங்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசின் நண்பன் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தக் கட்டிடத்தை வந்து பார்க்கும்போது 2 வது மாடி, யார் கட்டியது என்றால் மாநில அரசும் இந்த நிறுவனமும் கட்டியது என்று சொல்வார்கள், மத்திய அரசு என்ன செய்தது என்று கேட்டால் வாழ்த்துரை வழங்கியது-நல்லுரை கூறியது- நல்லெண்ணம் தெரிவித்தது என்று சொன்னால் - வேறு எதுவும் கொடுக்கவில்லையா என்று கேட்பார்கள்.

இங்கே வந்துள்ள இத்திட்டத்தின் அகில இந்திய பொறுப்பாளர் மத்திய அரசிடம் சொல்லி 4 வது மாடியைக் கட்டிக்கொடுக்க மத்திய அரசின் உதவியைப் பெற்றுத்தர வேண்டும்.

நாட்டிலுள்ள மருத்துவர்களுக்கு ஒரு சிறிய யோசனை கூறிக்கொள்வேன். இன்று தொழில் பரவி வரும் பகுதிகளில் புதுவகை நோய்கள் ஏற்படுகின்றன; அவற்றைத் தடுக்க கட்டுப்படுத்த அரிய ஆலோசனைகள் கூறவேண்டும்.

இரண்டு மாத காலத்துக்கு முன் ஒரு மாவட்டத்துக்குப் போயிருந்தேன். அந்தப் பிரச்னை இன்னும் முடிவடையாதிருப்பதால் அந்த மாவட்டத்தின் பெயரைச் சொல்லவில்லை, அங்கு துவக்கப்பட்டுள்ள புதிய தொழிற்சாலையின் கழிவு நீர், வாய்க்கால் வழியாக ஓடி வழியிலுள்ள பயிர் கருகி விடுகிறது - கழிவு நீரை வேறு வழியாக விடலாமே என்று சொன்னதற்கு வேறு இடமில்லையே என்று தொழிலதிபர்கள் கூறுகிறார்கள். இது போல தொழில்கள் வளர வளர புதிய பிரச்னைகள் புதிய நோய்கள் உருவாகின்றன. அவைகளையெல்லாம் தடுப்பதற்கு நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும்.

இன்று பல நோய்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மலேரியா கட்டுக்கடங்கி - களைந்தெறியப்பட்டுவிட்டது என்ற நிலையை அடைந்துவிட்டோம், அதுபோலவே காச நோயும்;