பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


துறைமுகத் தொழிலாளர் எவ்வளவு கடுமையான வேலை செய்கிறார்கள் என்பதை எல்லோரும் உணர்ந்திருப்போம். அவர்கள் செய்யும் வேலை மிகவும் முக்கியமானது. நாட்டின் உயிர் நாடி போல விளங்கக் கூடியவை துறைமுகங்கள். அதிலும் சென்னைத் துறைமுகம் முக்கிய பங்கை வகிக்கின்றது.

கடுமையாக உழைக்கும் அத்தொழிலாளிகளுக்கு அவா்களது அடிப்படைத் தேவையான குடியிருப்பு வசதிக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. நான் வீடுகளில் ஒன்றைப் போய்ப் பார்த்தேன். சிறந்த வசதிகளோடு கூடிய அவ் வீடுகள் குறைந்த வாடகைக்கு விடப்படுவது அதன் சிறப்பு! சிறியவர்கள் விளையாடி மகிழவும் இயற்கை அழகைப் பருகவும் பூங்காவை அங்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அதேபோன்ற குடியிருப்பு வசதிகள் எல்லாத் தொழிலாளிகளுக்கும் கிடைக்க வேண்டும். பல லட்சம் செலவிட்டு அங்கு நடந்துள்ள வேலைகளை எண்ணிப்பார்க்கும்போது துறைமுகத் தொழிலாளரில் 100 க்கு 11 சதவிகிதம் பேருக்கு மட்டுமே வசதி கிடைத்துள்ளதென்று அறிகிறோம். அக்காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று, பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு அவ்வசதி ஏற்பட வேண்டும்.

நிம்மதியான வாழ்வுதான்
நேர்த்தியான தொழிலைப் படைக்கும்

தொழிலாளர் வாழ்வில் நிம்மதி ஏற்பட்டால் தான் தொழில் நேர்த்தியாக இருக்கும். குறைபட்ட மனதோடு அவர்கள் வேலை செய்தால் தொழிலில் நேர்த்தியிருக்காது- தரம் இருக்காது—பயனும் கிடைக்காது.

இயந்திரங்களை எந்த அளவு நேர்த்தியாக வைத்துக்கொள்கிறோமோ அந்த அளவு அவற்றிலிருந்து பயன்பெற முடிகிறது.