பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


இதை நல்ல முறையில் துறைமுக டிரஸ்ட் உணர்ந்து செயல்பட்டுள்ளது அறிந்து மகிழ்ச்சி. மத்திய சர்க்காரும் இப்பணிக்கு கடனுதவியும் மானியமும் வழங்கியுள்ளது- இது போல இன்னும் கட்டிடங்கள் எழவேண்டும் -- துறைமுக டிரஸ்ட்டின் முயற்சிகளுக்காக நான் அவர்களைப் பாராட்டுகிறேன்.

நமது நாட்டில் தொழில்கள் வளர இயற்கையோடு ஒட்டி வாழுவது குறைக்கப்பட்டு வருகிறது.

காலையில் எழுந்தவுடன் பச்சைப்பசேலென்ற காட்சியும் பூங்காற்றும் வீசுகின்ற இயற்கையோடு ஒட்டிவாழுதலே உடலுக்கு நலன் பயக்கும் என்று உடற்கூறு நிபுணர்கள் கூறுகின்றனர் - ஆனால் நாட்டிலே இப்போது நல்ல வயல்களெல்லாம் பாங்கான கட்டிடங்களாகி விடுகின்றதைப் பார்க்கிறோம். தொழில்கள் அதிகமாகி வரும்போது புதிய நோய்களும் உண்டாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் இந்தக் காரணங்களால் நாம் தொழில் வளர்ச்சியை விட்டுவிட முடியாது-தொழில் வளர்ந்தால் தான் பொதுச் செல்வம் ஏற்படும்--அதன் வாயிலாகத் தனிப்பட்ட மனிதன் வாழ்விலும் வளமுண்டாகும்-ஆகவே தொழில்கள் வளருவதால் உண்டாகும் கேடுகளைத் திட்டமிட்டு நீக்கிட வேண்டும்.

இங்கு எவ்வளவு கருத்தோடு இந்தக் குடியிருப்பு அமைக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கும்போது எனக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது. பாழுங்கிணறு இருந்த இடத்தைப் பயனுள்ள தோட்டமாக ஆக்கியிருக்கிறார்கள் - துறை முக டிரஸ்ட்டின் அதிபர் இதை விளக்கினார்.

பூங்காற்று
வீசும் தோட்டம்

தொழிலாளரது வாழ்வானது பாழ்நிலமாக அல்லாமல். பசுமையோடு பூங்காற்று வீசும் தோட்டமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன்.