பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


ஆலைத் துணியில்தான் கண்ணைக் கவரும் ஆடைகளைத் தயாரிக்க முடியும் என்று நம்பப் பட்டது. ஆனால் இப்போது கைத்தறியில் கண்ணைக் கவரும் ஆடைகள் வேகமாகத் தயாராகின்றன.

நெசவாளர்களது எதிர் காலத்தை கவனித்து - வேறு தொழிலில் அமர்த்த வேண்டும் என்பது கவனிக்கப்பட தக்க பிரச்சினை என்றாலும் -

காலத்தோடு ஒட்டியது
கைத்தறித் தொழில்.

பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும் நேர்த்தியான கைத் திறமையை - வெளிச் சந்தையிலிருந்து ஏராளமான பணத்தை ஈட்டித் தந்த கைத் திறமையை விட்டுவிட வேண்டும் என்பது வரவேற்கத்தக்க கருத்தல்ல.

மக்களின் தேவைகளை அறிந்து ஆடை தினுசுகளை அடிக்கடி மாற்ற வேண்டும் என்று சில பெரியவர்கள் கூறுகிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் ஆண்டுக்கொருமுறை கண்காட்சியில் மட்டும் ஆடைகளைக் காண்பவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் கைத்தறியாளர்கள் வாரத்திற்கு ஒருமுறை சேலை தினுசுகளை மாற்றி வருகிறார்கள்.

ஒரு சினிமா வெற்றிகரமாக ஓடிவிட்டால் போதும் அடுத்த வாரமே அந்தப் பெயரில் ஒரு அழகான சேலை தினுசு தயாரித்து விடுவார்கள் கைத்தறியாளர்கள்.

இத்தனைக்கும் அந்தச் சினிமாவை நான்கு முறை பார்க்கும் வசதி அந்த நெசவாளர்க்கு இல்லை. ஒரே முறைதான் பார்க்கிறார். அந்தப் படத்தில் வரும் கதாநாயகி அணிந்திருக்கும் சேலையைப்போல் - தயாரிக்க நினைக்கிறார். அந்த நினைப்பு நம்பிக்கையாய் மாறி உள்ளத்திலிருந்து கிளம்பி விரல் நுனிக்கு வருகிறது. பிறகு தறியிலமர்ந்து அழகான சேலையைத் தயாரிக்கிறார்.