பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


இப்படி காலத்தோடு ஒட்டி நாளுக்கொரு தினுசாக அவா்கள் சேலையைத் தயாரிக்கிறார்கன்.

இங்கேயுள்ள கடைகளில் எந்தக் கடைக்கு வேண்டுமானாலும் போய்ப் பாருங்கள். எந்தச் சரக்கைப் பார்த்தாலும் வாங்கவேண்டும் - என்ற உணர்வுதான் வரும். அப்படிப்பட்ட அருமையான கைத்திறமை அந்த ஆடைகளில் இருக்கும்.

நெசவாளர்களுக்குள்ள கஷ்டங்கள் (1) நூல்விலை ஏற்றம் (2) சாயங்களின் ஏற்றம் (3) தேவையான முதலீடு தர பாங்குகளின் தயக்கம் (4) நம் நாட்டுக் கைத்தறியை இறக்குமதி செய்த நாடுகள் கதவைச் சாத்திவிட்டன.

இந்தக் காரணங்களால் நேர்த்தியான ஒரு தொழில், கால காலமாக பலர் ஈடுபட்ட தொழில் - ஒரு காலத்தில் ரோமானிய நாடு பாராட்டிய தொழில்-பஞ்சத் தொழிலாக மாறிவிட்டது. வேதனை தருவதாக இருக்கிறது. பத்து பைசா தரலாமா? தோளில் சுமந்து விற்கலாமா? கண்காட்சி ஏற்படுத்தி விற்கலாமா? என்று சந்தை தேடவேண்டியிருக்கிறது!

இதற்குக் காரணம் யார்? - என்பதை இந்தக் கூட்டுறவு சங்கத்தினர் அறிவார்கள்.

வெளிநாடுகளில் நமது தூதுவர்கள் இருக்கிறார்கள். வியாபாரத்தைப் பெருக்குவதற்கென்றே சில அதிகாரிகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவாகிறது. அவர்கள் வெளிநாட்டில் கைத்தறியாடைகள் வாங்கவேண்டிய ஆர்வத்தை பிறருக்கு ஊட்டியிருந்தால் நல்ல சந்தை கிடைத்திருக்கும்.

ஆனால் நான் வெளிநாடு சென்றிருந்தபோது சந்தித்த அதிகாரிகள் - மேனாட்டு உடையை அணிந்து கொண்டிருக்கிறார்கள் அல்லது தேசிய உடை என்று கதரை அணிந்துகொண்டிருக்கிறார்கள்.