பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

 பெற்றுள்ள பட்டங்கள் என்பதனைச் சொல்லாலும் செயலாலும் காட்டிட வாரீர் எனக் கனிவுடன் அழைக்கின்றேன்.

இவை ஏட்டில் படித்திட இனிப்பவை; விளக்கிப் பேசிட ஏற்றவை; வியந்து கூறிடத்தக்கவை. ஆனால், நடை முறைக்குக் கொண்டு வருதல் எளிதன்று, தொடர்ந்து கடைப் பிடித்தல் அரிது. அதற்குத் தளரா உறுதியும் மங்காத ஊக்கமும் ஓயாத உழைப்பும், சீரான நோக்கமும் தன்னல மறுப்பும் மிகமிகத் தேவை- பல்கலைக்கழகம் இந்தப் பண்பினைத் தந்திடும், தந்துள்ளது என்று எண்ணுகிறேன். ஆம்! என்று உமது சீரிய பணியின் மூலம் மெய்ப்பிக்க வேண்டுகின்றேன்.

தேவையற்றவை, தீது தருபவை, பொருளற்றவை, பொருத்தமற்றவை - இவையெல்லாம் பழமையின் பெயர் கொண்டோ நமது உடைமை என்னும் பாசம் காட்டியோ நெளிந்திடக் கண்டபின், விட்டு வைத்திடாமல், அவற்றினை நீக்கிடும் அறப்போரினைத் தொடுத்திடுதல் வேண்டும்.

அவர் கூறியுள்ளார், ஆகவே, அஃது அறிவுடையதாகவே இருந்திடல் வேண்டும் என்று எண்ணி இருந்திடாமல்; அவர் உரைத்தது இஃது என்பதற்கு முதலிடம் தராமல், உரைத்துளது யாது என்பதற்கே முதலிடம் தந்து, உண்மையேனில், உயிர்கொடுத்தேனும் காத்தி டுவோம். அன்று எனில், உயிர் போவதெனினும் எதிர்த்து நீக்கி அறிவுத்துறைப் புரட்சியிலே ஈடுபட வருமாறு பட்டம் பெற்றுள்ள நல்லோரை அழைக்கின்றேன்.

இந்நாட்டுத் தேன் எனின், கொட்டிடின் குளிர்ச்சியோ காண்போம்? பிறநாட்டுத் தேன். எனின், பருயிடிற் கசப்போ இருந்திடும்?

எங்கிருந்து கிடைத்திடினும் ஏற்புடையதெனின், எமதாக்கிக் கொள்வோம் என்னும் நோக்கம் தேவை. அதனைத் தந்திடவும் அதன்மூலம் பயன் கண்டிடவும் இணைந்து பணியாற்றிட வேண்டும், -