பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18இப்பல்கலைக் கழகம் எனக்களித்த சீர்மிகு சிறப்புக்கு நன்றி கூறிப் பெருந்தயக்கத்துடனும் தடுமாற்றத்துடனும் இந்தப் பேரவையில் பட்டமளிப்பு விழா உரையாற்ற உங்கள் முன் நிற்கிறேன்.

ஆண்டின் பட்டதாரிகளை வாழ்த்துவதற்கும் அவர்களுக்கு ஒளியும் ஒண்மையும் சேர் எதிர்காலம் அமையுமாறு கூறுவதற்குமுரிய மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியில் இங்கிருப்பது இன்பந்தருவதென்றாலும் அவர்களுக்கு ஆன்ற அறிவுரை கூறுவது என்பது அரிய பணியே. ஏனெனில், எனது குறை பாடுகளையும் கடந்த காலத்தில் இம்மேடையில் நின்று பட்டதாரிகளுக்குத் தகுதியும் தரமுமிக்க அறிவுரை நல்கிய ஆன்றோரையும் நான் நன்கறிவேன்.

துறைபோகிய மேதைகள், தேர்ந்து தெளிந்த நல்லறிஞர் கள், அரிய ஆற்றல் மிகு ஆட்சியாளர்கள் ஆகியோரெல்லாம் இங்கு வந்துள்ளனர்,தங்கள் தெள்ளிய தெளிவுரைகளை வழங்க. எனக்கு முன் இங்கு வந்து உரையாற்றியோர் கூறியவற்றிற்கு மேலாக எவையேனும் ஏற்றமானவற்றைக் கூற எனக்குத் திறமையில்லை என்பதனை ஒரு கணம் கற்பனை செய்து பார்க்கிறேன். ஆகவே, இப்பட்டமளிப்பு விழா உரையாற்ற என்னைப் பணித்திருப்பது பொதுவாகப் பக்கலைக்கழகங் களின் பணி குறித்தும் சிறப்பாக, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் பணி பற்றியும் மிக்க ஏற்றமுள்ள கருத்தினை வழங்க என்பதனை உணர்ந்து, நீங்கள் விடுத்த அழைப்பை ஆணையே என எண்ணி அமைதியடைகிறேன்.

என் குறைபாடுகளை நான் அறிந்திருக்கிறேன் என்பது என் பணியின் பளுத்தணிவை எனக்களிக்கிறது. ஏனெனில் தனி முத்திரையோடு கொள்கைகளையே முதன்மையான கருத்துக்களையோ கூற நான் முனையப்போவதில்லை. ஆனால், கடந்த காலத்தில் இங்கு அறிவுரை வழங்கியபோது அடிப்படை நெறிமுறைகளில் சிலவற்றை நீங்கள் நினைவு கூரச்செய்ய மட்டுமே விரும்புகிறேன். அவ்வாறு செய்யுங்