பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20

 கழகங்கள் பயிற்றுவிக்க வேண்டியிருந்தன. அவர் தம் அறிவு மாடமாளிக்கைக்காகவே இருந்தது, மக்கள் மன்றத்திற்காக அல்ல.

அந்த நாட்கள் எண்ணிக்கை ஏற்றம் பெற்ற காலம். நல்லறிஞர்களே மக்களை நோக்கியுள்ள சிக்கல்களை ஏறெடுத்தும் பார்க்காத காலம், பாமரனின் சத்தத்திலிருந்தும் சந்தடியிலிருந்தும் அப்பால் ஒடுங்கிய இடங்களில் அமர்ந்து பணியாற்ற அவர்கள் மனநிறைவு கொண்டிருந்தனர். மெய்யறிவு அல்லது கவிதை எனும் விலையுயர்ந்த இழையை அவர்கள் நெய்தனர். இவ்விழை மீண்டும் பளபளக்கும் பட்டாடைகளாக அவற்றைத் தேர்ந்தெடுத்தோருக்கும் பேற்றுரிமை பெற்றோருக்கும் பயன்பட்டது.

2

கடந்த காலத்தில் உள்ளது போன்று, இன்று பல்கலைக்கழகத்தின் பணி வரையறுக்கப்பட்டதோ விலக்கிற்கானதோ அன்று. அதன் செயலாண்மை விரிந்துள்ளது. அதன் அடிப்படைகளில் அல்ல, எல்லையில். அது பாமரனைக் கணக்கில் கொள்ளவேண்டியுள்ளது. அவனுடைய பாமரத்தன்மையை நீடித்திருக்கச் செய்ய அல்ல. மாறாக, அவனைச் சீராக்கவும் செம்மைப்படுத்தவும் அறிவுறுத்தவும் வழிநடத்தவும் செய்திட. ஏனெனில் இன்று அவன் வழக்கத்திற்கு மாறான பணிகளை ஆற்றவேண்டியுள்ளது.

மக்களாட்சியில் குடிமகன் என்னுங் கடமையை அவன் செய்யவேண்டியுள்ளது. இப்பணி இனிய எண்ணங்களைத் தூண்டவல்லது. ஆனால், அது வேண்டுவது பொறுமையும் விடாமுயற்சியும், நம்பிக்கையும் நல்லெண்ணமும், தனக்குத் தானே நம்பிக்கையும் மற்றவர்கள் மீது நம்பிக்கையும், பொறுப்புக்களைத் தாங்கும் அவனுடைய இயற்கைத் திறத்தில் நம்பிக்கையும் ஆகும்.