பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21

 நாட்டை ஆள்பவனாகவும் பாமரன் ஆகியுள்ளான். தன்னுடைய தலைவிதியைத் தன் கையிலேயே அவன் ஏந்தியுள்ளான்.

அரண்மனைகளிலும் மாடமாளிகைகளிலும் ஆளுவோர் பிறந்த அக்காலத்தைப் போலல்லாது, இன்று ஒவ்வொரு சிற்றுாரும் சிறுகுடிசையும் ஓர் உள்ளார்ந்த ஆற்றல் பெற்ற ஆட்சிப் பிறப்பிடமாகியுள்ளது. இந்நிலையில் பல்கலைக் கழகங்களின் இன்றைய கடமை, இன்றைய பொறுப்பு, மக்களாட்சியைக் கனிவுள்ளதாகவும் கருதத்தக்கதாகவும் ஆக்கக்கூடிய ஒரு தனியாளாகப் பாமரனை உருவாக்குவதே ஆகும்.

நோக்கிலும் அளவிலும் பல்கலைக் கழகங்களின் பொறுப்புக்களும் கடமைகளும் வளர்ந்துள்ளன என்று கூறினேன். ஆனால், அடிப்படைகள் மாறவில்லை என்றும், இந்த அடிப்படைகள் நிலைத்தபேறும் நீடிய பயனும் உடையன என்றும் சுட்டிக் காட்டினேன்.

பல்கலைக் கழகத்தின் தலைவாய பணி, அறிவாற்றலைப் பெற விரும்புவோர்க்கு அதனை அதன் உண்மையான அளவிலும் நோக்கிலும் அளிப்பதும், உலகின் கருத்துக்கள் குறிக்கோள்கள் ஆகியவற்றின் தனியாண்மையினைக் காப்பதுமாகும்.

நடுநிலையுள்ளம், சிறப்புனவற்றையும் சிறப்பில்லாதவற்றையும் வேறுபடுத்தி அறியும் திறம், அச்சமோ அயர்வோ இன்றி, ஒரு சிக்கலை அதன் எல்லாக் கோணங்களிலும் பார்க்கும் திறன், மற்றவர் கருத்தை மருட்சியில்லாமல் ஏற்றல் ஆகியவை மாற்ற இயலா அடிப்படைகளாகும். இவ்வியல்புகள் பெற்றுள்ள ஆடவரையும் பெண்டிரையும் நீரோட்டம் போல் தொடர்ந்து சமூகத்திற்களிப்பது பல்கலைக் கழகங்களால் மட்டுமே இயலும்.