பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
“காய்ச்சலோடு ஏன் வந்தீர்கள்?”

இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்ததால் 1965-ஆம் ஆண்டில் நடத்தமுடியாமல் போன RMS ஊழியர்களின் 9.வது மாநில மாநாட்டைச் சென்னையில் 4.1.66 முதல் 5.1.66 முடிய நடத்தினோம். அதனால், இதே ஆண்டின் இறுதியிலேயே பத்தாவது மாநில மாநாட்டைச் சோலையார் பேட்டையில் நடத்த நேரிட்டது. அங்கிருந்த லோகநாதன் போன்ற தோழர்கள் எல்லா ஏற்பாடுகளும் செய்தனர் ஆர்வத்துடன். துணைச் செயலாளர் கோவை ஞானப்பிரகாசம் ஒத்துழைத்தார்.

மலைகள் சூழ்ந்த இயற்கை கொலு வீற்றிருக்கும் எழில் மிகு ரயில்வே சந்திப்பு அருகே ரயில்வே இன்ஸ்டிட்யூட் கட்டடத்தில் மாநிலப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்று வந்தது. இரண்டாம் நாள் இறுதிக் கட்டமாகச் சிறப்புப் பொதுக் கூட்டம்; 20.11.1966 அன்று மாலை. இதில் பங்கேற்று எங்கள் பிரச்சினைகளை மக்களுக்குத் தக்கவாறு எடுத்துரைக்கப் பேரறிஞர் அண்ணா, சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் ஆகியோரை அழைத்திருந்தோம். ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக நீண்ட நாள் அனுபவம் பெற்று, முன்பு பெரியார் ஆதரவுடன் தென் பகுதி ரயில்வேத் தொழிலாளர் சங்கம் தொடங்கிப் பின், அதிலிருந்தும் விலகி, இப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிதாக இணைந்ததன் பயனாய்ச் சென்னையில் சில தொழிற்சங்கங்களின் தலைவராக விளங்கிய நண்பர் இராகவானந்தம் ஒரு சொற்பொழிவாளர். மற்றும் திருப்பத்தூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், திருப்பத்தூர் நகரமன்றத் தலைவருமாகிய நண்பர்