பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

அண்ணா—சில நினைவுகள்


எங்கள் ஆர்.எம்.எஸ். அலுவலகத்துக்கு அருகேயுள்ள ஓர் ஒதுக்குப்புறத்தைக் காண்பித்தேன். வண்டியிலிருந்து யாரும் இறங்கவில்லை, டிரைவர் சுந்தா தவிர.

சரியாக ஒருமணி நேரம் அண்ணா என்னிடம் பேசினார்கள். திராவிட முன்னேற்றக்கழகம் தொடங்கி மூன்று நான்கு ஆண்டுகளே ஆனபடியால், அதை எப்படி வளர்க்க வேண்டும்; அதற்கு எப்பேர்ப்பட்ட தியாக மனப்பான்மையுள்ள தொண்டர்கள் வேண்டும்; புதிதாக வருபவர்களை, ஏற்கனவே இருப்பவர்கள் எவ்வாறு அரவணைத்து, விட்டுக் கொடுத்து, இணைத்துச் செல்லவேண்டும் என்றெல்லாம் பொதுப்படையாக முதலில் சொன்னார்கள். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை! நான் முழுநேரத் தொண்டனல்லவே - என்னிடம் ஏன் இவ்வளவும் சொல்லி வருகிறார்கள்-என்ற என் திகைப்பு நீங்குமாறு, பதில் உடனடியாகவே வந்துவிட்டது.

“நீ கிட்டப்பாவை உன் கைக்குள் வைச்சிக் காப்பாத்தணும். ஏண்ணா, இம்மாதிரி பிற்படுத்தப்பட்ட வகுப்பிலேயிருந்து, அதிலும் இந்தப் பகுதியில் செல்வாக்குள்ள ஒருவகுப்பிலிருந்து-நமக்குத் தொண்டர்கள் கிடைப்பது கடினம். முன்கோபியே தவிர கொள்கைப் பற்றுள்ள பையன். முதலில் நீ அவரைச் சரியாகப் புரிந்துகொள். அதன்பிறகு உன் ஆலோசனைகளை அடிக்கடி கேட்கிறமாதிரி உன்னிடம் தொடர்பு வச்சிக்கணும் அவரு. அதுக்கு ஏற்பாடு செஞ்சிக்க நீ-” என்று பலவாறு கூறிவிட்டு, கிட்டப்பாவை ஒரு ஷேப் (shape)புக்குக் கொண்டுவர வேண்டியது உன் பொறுப்பு தான். நான் ஒன்னத்தான் இனி கேட்பேன்!” என முடித்தார்கள் அண்ணா.

தனிப்பட்ட ஒரு தொண்டனை உருவாக்கிட, ஒர் மாபெரும் இயக்கத்தின் தலைவர் இவ்வளவு சிரத்தையும், அக்கறையும் எடுத்துக்கொள்ள முடியுமா என்ற வியப்பு எனக்கு இன்னுங்கூட நீங்கியபாடில்லை!