பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

21


அண்ணாவின் இந்த ஆணையை இனிது நிறைவேற்றிய தாகவே நான் நம்புகிறேன். 1953-ல் பெரிய குழுவினருடன் ரயில் நிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு; கலைஞரோடு திருச்சி சிறையில் முதன்முறையாக நுழைந்த கிட்டப்பா, மாநில மட்டத்தில் தொடர்ந்து புகழ் பெற்றார். சாகும்வரை கழகம் நடத்திய எல்லாப் போராட்டங்களிலும் தவறாமல் சிறைபுகுந்தார். மாயூரம் வட்டத்தில் கழகத்தை ஓங்கி உயர வளர்த்தார். அவர் மாவட்டத் துணைச் செயலாளராகவும் பொதுக் குழு உறுப்பினராகவும் ஆவதற்கு நானே ஓட்டுச் சேகரித்து, உயர்த்தினேன், 1967-ல் தொடங்கி, நான்கு தேர்தல் களிலும் மாயூரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக விளங்கினார். சட்ட மன்றத்திலே. எண்ணிக்கையில் அதிகமான வினாக்கள் எழுப்பி, “கேள்வி மன்னன் கிட்டப்பா” எனப் புகழ்க்கொடி பறக்கவிட்டார்.

“கருணானந்தம், கருணானந்தம்! இங்க வா! இங்க வா! நம்ம கிட்டப்பா மாயவரத்தில் வெற்றி! கழகத்துக்கு முதல் வெற்றி ரிசல்ட் தந்தது அவர் தான்” என்று அண்ணா அவர்கள் பூரிப்புப் பெருங்குரலில் என்னைக் கூவி அழைத்தார்கள்; 1967 தேர்தல் முடிவுகள் வெளியான. அன்று, நுங்கம்பாக்கம் இல்லத்து மாடியிலிருந்து கொண்டு, கீழே நின்ற என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்கள்! அப்போது நான் பெருமித நோக்கால் அண்ணாவைப் பார்த்துச் சொன்னேன் - “அண்ணக்கு ஒருநாள் மாயவரத்தில் கிட்டப்பாவைப் பார்த்துக்கொள் என்று சொன்னீங்களே, நெனவு இருக்குதாண்ணா !” என்று புன்னகையால் பதிலளித்தார். அண்ணல் பெருந்தகையார்!