பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

அதிகமான் நெடுமான் அஞ்சி

தன் குதிரையாகிய காரியின்மீதுஏறிப் பம்பரம்போலச் சுழன்றனன். அதிகமானுடைய பட்டத்து யானையைத் தன்வேலைக்கொண்டுதாக்கி வீழ்த்தவேண்டும் என்பது அவன் ஆவல். அது உள்ள இடமறிந்து தாவினான்.

இது அதிகமான் படைத் தலைவனுக்குத் தெரிந்து விட்டது. “எல்லோரும் விழிப்பாக இருக்க வேண்டும். அதோ காரி யென்னும் குதிரையின்மேல் வருகிறான் காரி. அவன் அந்தக் குதிரையின் மேல் ஏறி நடத்துவதாகத் தோன்றவில்லை. குதிரையும் அவனும் ஒட்டியிருக்கின்றனர். அந்த அடற் பரியையும் அவனையும் பிரிக்க முடியாமல் கட்டி வைத்ததுபோலத் தோற்றம் தருகிறது, அந்தக் கோலம். அவன் காலில் வீரக் கழல் பளபளக்கிறது. கையில் வேல் சுடர் விடுகிறது. அவன் இலக்காகக் கொண்டிருப்பது இந்தப் பட்டத்து யானையை. நீங்கள் இந்தப் படை முழுவதையும் காக்க வேண்டும் என்பதில்லை. இந்த யானையைப் பாதுகாத்தால் போதும். அவன் வேறு ஒன்றையும் எறிய மாட்டான். இதைக் கொல்லும் குறிப்புடனே வருகிறான்” என்று வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

தகடூர்ப் போரை வருணித்துப் பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். ‘தகடூர் யாத்திரை’ என்று தனியே ஒரு காப்பியமாக அந்தப் பாடல்கள்உருவாயின.இப்போது அந்தக் காப்பியம் முழுவதும் கிடைக்கா விட்டாலும் புறத்திரட்டு என்னும் நூலில் அதிலிருந்து சில பாடல்கள் சேர்க்கப் பெற்றுள்ளன. மலையமான் திருமுடிக் காரி அதிகமானது பட்டத்து யானையை வேலினால் எறிய முந்திய போது, அதிகமானுடைய படைக்குத் தலைவனாக இருந்தவன் கூறியதைத் தகடூர் யாத்திரைப் பாடல் ஒன்று விளக்குகிறது.

கட்டி அன்ன காரி மேலோன்
தொட்டது கழலே; கையது வேலே;