பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

அதிகமான் நெடுமான் அஞ்சி

சாய்ப்பான்; அவனால் இயலாத செயலே இல்லை. ஒரு கால் அவன் தளர்ச்சியடைவதாக இருந்தால் காரி இருக்கிறான். தமிழ்நாட்டுப் படைகள் அத்தனையும் எதிர்த்தாலும் அஞ்சாமல் எதிர்நின்று மார்தட்டும் வீரன் அவன். அவனுடைய வீரம் இலக்கியத்தில் ஏறியதல்லவா ?

நினைக்க நினைக்கப் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு ஊக்கம் வளர்ந்தது; துணிவு பிறந்தது ; வெற்றி நிச்சயம் என்ற முடிவு ஒளிவிட்டது. செய்ய வேண்டிய ஆயத்தங்கள் பெரும்பாலும் நிறைவேறின. போர் முரசு கொட்டவேண்டியதுதான்.

ஒரு நாள் தன்னுடைய அமைச்சர்களையும் படைத்தலைவர்களையும் சான்றோர்களையும் வைத்துக்கொண்டு மந்திராலோசனை செய்யத் தொடங்கினான். பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அன்புகொண்டு அவனைப் பாடிய அரிசில்கிழார் என்னும் புலவரும் அங்கே இருந்தார். பெருஞ்சேரல் இரும்பொறை போரிடவேண்டிய காரணத்தை எடுத்துரைத்தான். “அதிகமான் எப்போதும் நமக்குப் பகைவனாக இருக்கிறான். அவனுடைய குடியே சேரர்களுக்குத் தீங்கு எண்ணும் குடி. தாங்களே சேர மன்னர்களாக முடி கவித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அதியர் குலத்தினருக்கு இருந்துவருகிறது. அதிகமான் நெடுமான் அஞ்சி வர வரப் பல நாடுகளை வலியச் சென்று போரிட்டுத் தன் ஆட்சிக்கீழ்க் கொண்டுவருகிறான். அவனுடைய செயலால் நாடு இழந்த நல்லவர்கள் பலர்” என்றான்.

“பழையவர்களைப்பற்றி இப்பொழுது எண்ண வேண்டாம். அதிகமானைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார் ஒரு பெரியவர்.

“அதிகமான் ஈகையிற் சிறந்தவன், அறிவிற் சிறந்தவன் என்று யாவரும் சொல்கிறார்களே !” என்றார் அரிசில்கிழார்.