பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

அதிகமான் நெடுமான் அஞ்சி

நாளும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தான் அதிகமான். தூதோலே அவனிடம் வந்தது. படித்துப் பார்த்தான் . உடனே அமைச்சர், படைத்தலைவர், சான்றோர்கள் ஆகியவர்களை அழைத்து அவை கூட்டினான். மந்திரச் சூழ்ச்சியில் யாவரும் ஈடுபட்டனர்.

சில பெரியவர்கள் திருக்கோவலூரைக் கொடுத்து விடலாம் என்றார்கள். படைத்தலைவர்கள் அதற்கு இசையவில்லை. கடைசியில் போரையே வரவேற்பதென்று முடிவாயிற்று. “பாம்பின வாயில் புகுந்த தேரை மீண்டாலும் மீளும்; அதிகமான் கையில் சிக்கியது மீளாது என்பதைச் சேரன் தெரிந்து கொள்ளட்டும்” என்று விடை அனுப்பிவிட்டான்.

அதிகமான் கோட்டை பரந்து விரிந்த இடத்தை உடையது. மண்ணை அரைத்து வெல்லம், முட்டைப் பசை, வேறு பசைகள் ஆகியவற்றைக் கலந்து குழைத்து அமைத்தது. செம்பினால் செய்ததுபோன்ற வலிமையை உடையது. உறையூர், வஞ்சி, மதுரை என்னும் மாநகரில் உள்ள மதில்களைப்போன்ற சுற்று வட்டம் இல்லாவிட்டாலும் இக்கோட்டை மதில்கள் உறுதியானவை. உள்ளே மேடைகளும், அம்பை மறைவாக நின்று எய்யும் புழைகளும், குவியல் குவியலாக இரும்புத் துண்டுகளையும் வறுத்த மணலையும் வீசி எறியும்படியான மறைவிடங்களும் இருந்தன.

கோட்டையைச் சுற்றிலும் ஆழமான அகழியொன்று இருந்தது. அதன்மேல் வேண்டியபோது போடவும் போர் வந்தால் எடுத்துவிடவும் எளியனவாகப் பாலங்கள் இருந்தன. அகழியில் முதலைகளே விட்டு வளர்த்து வந்தார்கள். எவ்வளவு வலிமை இருந்தாலும் அகழியைத் தாண்டுவது அரிது. ஏதேனும் தந்திரம் செய்து அதைக் கடந்தாலும் மதிலின் மேல் ஏற முடியாது. மதில் வாயிற்