பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

அதிகமான் நெடுமான் அஞ்சி


“நம்முடைய மன்னனுடைய பெருமையை நாளுக்கு நாள் மிகுதியாக உணர்ந்து பெருமிதம் அடைகிறேன். உணவுப் பொருள் இருந்துவிட்டால் எல்லோருக்கும் விருந்தளித்துத் தானும் உடன் உண்ணும் இயல்பை உடையவன் அவன். இப்போது உங்களுக்கு வேண்டிய உணவை அளிக்கிறான். மற்ற நாட்களில் என்னைப்போல வந்து இரப்பவர்களுக்கு எல்லையின்றிக் கொடுக்கிறான். நீங்கள் பெறுவதைவிட மிகுதியாகப் பெறுகிறவர்கள் அந்த இரவலர்களே. தான் அறிவிற் சிறந்தவனானாலும் அறிவு இல்லாதவர்களையும் இரங்கி ஆதரிக்கிறான், உயிர்க் கூட்டத்தின்பால் அவனுக்கு இருக்கும் கருணை அளவு கடந்தது.”

அந்தப் பெருமாட்டியார் இப்போது இதைச் சொல்ல வந்தது எதற்காக என்று பலர் எண்ணினார்கள். ஏதோ இன்றியமையாத செய்தியைச் சொல்லத்தான் அவர் முன்னுரை விரிக்கிறார் என்று படைத் தலைவர்கள் உய்த்துணர்ந்தார்கள் . ஔவையார் உரையைத் தொடர்ந்தார் :

“கருணை மிகுதி காரணமாக, அதிகமான் உடனே வெளியிலே சென்று போர்க்களத்தை உண்டாக்கத் துணியவில்லை. வீரம் இன்மையினாலோ, அச்சத்தாலோ அவன் கதவுகளைச் சாத்திக்கொண்டு இங்கே உட் கார்ந்து கொண்டிருக்கவில்லை.”

கதவைத் திறக்கவேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். ஏதோ குற்றம் செய்தவர்களைப் போன்ற நினைவினால் தலையைத் தாழ்த்திக் கொண்டார்கள். தமிழ்ப் பெருஞ்செல்வியார் தம் பேச்சை முடிக்கவில்லை ; பின்னும் பேசலானார் :

“நெருப்பை உண்டாக்க மரத்தைக் கடைய வேண்டும். அதற்கென்று தீக்கடைகோல் இருக்கிறது.