பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

அதிகமான் நெடுமான் அஞ்சி

செய்து வந்தார்கள். மயிர் வினைஞர்கள், ஆடை வெளுப்பவர்கள், மண்கலம் கொடுப்பவர்கள். கட்டிட வேலை செய்பவர்கள், கொல்லர்கள், தச்சர்கள், கன்னார வேலை செய்பவர்கள், பொன் வாணிகர்கள் ஆகிய எல்லோருமே தந்தைக்குப் பின் மகனாக அரண்மனை ஊழியத்தைப் புரிந்து வருகிறவர்களே. அவரவர்கள் வாழ்க்கைக்குப் போதிய விளைவையுடைய இறையிலி நிலங்களைப் பழைய அரசர்கள் வழங்கியிருந்தார்கள். ஒவ்வோராண்டும் பண்டிகைக் காலங்களில் ஆடை, அணி, உணவுப் பண்டங்கள் முதலியன அரண்மனையிலிருந்து தனியே கிடைக்கும். அரண்மனையில் உள்ளவர்களுக்குத் திருமணமோ, மகப்பேறோ உண்டானால் அப்போது பரிசுகள் கிடைக்கும். அதனால் அத்தகைய தொழிலாளிகளும் கலைஞர்களும் நன்றாக வாழ்ந்தார்கள். பண்டிகைகளையும் விழாக்களையும் கொண்டாடினார்கள். அவர்களுடைய வீட்டில் மணம் முதலியன நடந்தால் அரண்மனையிலிருந்து அவற்றிற்கென்று தனியே பண்டங்களும் பொருளும் கிடைக்கும். இதனால், யாதொரு குறைவுமின்றி மனநிறைவோடு அந்தத் தொழிலாளர்கள் தம் தம் கடமைகளை ஒழுங்காகச் செய்துவந்தார்கள்; அரசனிடத்திலும் அவனுடைய உறவினர்களிடத்திலும் நண்பர்களிடத்திலும் அவர்களுக்கு ஆழ்ந்த அன்பு இருந்தது. அதுபோலவே அரண்மனையிலுள்ள அரசரும் அரசியரும் அந்தத் தொழிலாளர்கள் நன்மையைத் தம் நன்மையாகவே கருதி ஆவன செய்து வந்தார்கள்.

இத்தகைய அமைப்பில் அரசியின் ஆடைகளை வெளுக்கும் கடமையை ஒரு குடும்பத்தினர் மேற்கொண்டிருந்தனர். அதிகமான் காலத்தில் ஒரு பெண்மணி அரசிக்கு உடை ஒலிக்கும் ஊழியம் புரிந்துவந்தாள். அவளுக்கு ஒரு சிறிய பெண் இருந்தாள். அரண்மனைக்கு