28
அதிசயப் பெண்
நரி மறுபடியும் காக்கையைப் பார்த்து, "தம்பி, நீ பிறருக்குக் கொடுக்காமல் எதையும் உண்ணாதவன். இந்த இட்டிலியைத் தின்ன உன் உறவினர்களைக் ‘கா கா’ என்று அழைக்கிறாயே, நான் இருக்கிறேன்."என்னையும் உன் சொந்தக்காரனாக எண்ணி எனக்கு ஒரு துண்டாவது கொடு” என்று கெஞ்சிக் கேட்டது.
காக்கைக்குக் கொஞ்சம் மனசு இரங்கியது. அந்த இட்டிலியை மறுபடியும் கவ்விக்கொண்டு கீழே இருந்த ஒரு கல்லின்மேல் உட்கார்ந்துகொண்டது.
அதற்குள் நரி என்னவோ நினைத்துக்கொண்டது; "தம்பி, ஒரு விஷயம் சொல்கிறேன்; கேட்கிறாயா? இந்த இட்டிலி, வெறும் இட்டிலியாக இருக்கிறது. மனிதர்கள், மிளகாய்ப் பொடி என்றும், சட்டினி என்றும் சில பதார்த்தங்களை இதற்கு உபயோகிப்பார்களாம். நாமும் அந்தமாதிரி ஒன்றோடு இட்டிலியைச் சாப்பிடலாம் என்று தோன்றுகிறது. உனக்குச் சம்மதமாக இருந்தால் அப்படிச் செய்யலாம்" என்றது.
காக்கை, “இப்போது மிளகாய்ப்பொடிக்கு எங்கே போவது?” என்று கேட்டது.
"இதுதானா பிரமாதம்? இட்டிலி எப்படிக் கிடைத்ததோ, அது மாதிரி மிளகாய்ப் பொடியும் கிடைக்கும். நீ மனசு வைத்தால் எதுதான் கிடைக்காது? நீ இப்போதே ஊருக்குள் போய் மிளகாய்ப்பொடியையும் சம்பாதித்துக்கொண்டு வந்துவிடு. அதுவரையில் நான் இதைப் பாதுகாத்துக்கொண்டிருக்கிறேன்" என்று தந்திரமாகச் சொல்லியது.