பக்கம்:அநுக்கிரகா.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

119

பேசுவதை எல்லாமே நிறுத்திவிட்டார் அவர். முரண்டு தான். ஆனால் வைராக்கியமாகத் தொடர்ந்தது.

இப்படி இத்தனை தண்டச் செலவுகள் ஆன பின்பும் இன்னும் கூட அறுபது எழுபது லட்சத்துக்குச் சொத்து மீதி இருந்தது. சாவதற்கு முன் மிருகங்களுக்கு உதவும் 'ப்ளூ க்ராஸ்' நிறுவனத்திற்கு அவ்வளவு சொத்தையும் எழுதி வைத்து விடலாமா என்றுகூட எண்ணினார் அவர். 'மேன் இஸ் ஆன் அன்கிரேட்ஃபுல் எனிமல். எனிமல்ஸ் ஆர் க்ரேட்ஃபுல் தென் மேன்' என்று விரக்தியாக நினைத்தார். மீனைப் பிடிப்பதற்காகத் தூண்டிலைப் போட்டுத் தூண்டிலே மூழ்கிப் போய் கை நழுவி விட்ட நிலையாயிருந்தது அவருடையது. தன் மகளைப்போல் படித்த பெண்ணே இந்த வேஷம் கட்டியாடும் அரசியலில் ஒரு நடிகையாகிப் போனது அவர் மனத்தை மிகவும் பாதித்திருந்தது. பொது இடங்களில் மகளைப் பார்த்தால் கூட அவர் பேசுவதில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

மெல்ல மெல்ல இது வெளியே தெரிந்த விரோதமும் ஆகிவிட்டது. ஆவாரம்பட்டு ஜமீன்தாராகிய கோடீசுவரர் தனக்கு விரோதியாகி விட்டார் என்பது கூட அநுக்கிரகாவுக்கு இன்று ஒரு ப்ளஸ் பாயிண்டாகி விட்டது. மகளின் சோஷலிஸ முற்போக்குக் கொள்கைகள் பிடிக்காததால் அவளோடு பேசுவதை நிறுத்தி விட்டார் என்ற விவரம் அவளது இமேஜை வளர்க்கவே உதவியது.

"ஃபாதர் ரொம்பக் கன்ஸர்வேடிங், ஃப்யூடல் சொஸைட்டியிலே வளர்ந்து உருவானவர். அதனால எனக்கும் அவருக்கும் ஒத்து வரலே. ஒருத்தருக்கொருத்தர் இப்போ பேச்சு வார்த்தை கிடையாது," என்றாள் அவள்.

இந்தச் சண்டை பிரபலமாக வெளியே தெரிந்ததால், ஆவாரம்பட்டு ஹவுஸின் முன்புறம் மைதானத்தில் மேலும் பத்திருபது குடிசைகள் , சாலையோரமாகப் புதிதாய் முளைத்தன. அதற்கு 'அநுக்கிரகா நகர்' என்று பெரிதாகப் பெயரும் எழுதிப் போட்டிருந்தார்கள். 'முத்தையா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/121&oldid=1265102" இலிருந்து மீள்விக்கப்பட்டது