பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறுக உலர ஆரம்பித்திருந்தது. சந்தனப் பிறைக் கீற்று இப்போது துலாம்பரமாகவே தெரிகிறது.

பாபு இளங்கன்றாகத் துள்ளி எழுந்தான்; அவன் பயம் அறிந்தவன்தான்; ஆனாலும், இப்போது அவன் பயப்படவில்லை!- நான் ஏன் பயப்படவேண்டும்? மகேஷ் எழுந்து நின்று எதிர்த் திசையை நோக்கி நடந்தான். “மகேஷ் ஸாரே! என்கிட்டே நீங்க பேசுறதும் பேச விரும்பாததும் உங்க சொந்த விஷயம்னு சொன்னீங்க; ரொம்ப சரி. ஆனா, நீங்க என் கையிலே என்னவோ பேச நினைச்சீங்கதானே?- உங்களோட அந்த ஒரு எண்ணம் என்னையும் சம்பந்தப்படுத்தாதுங்களா? அப்படியானா, அந்தச் சம்பந்தத்தை வச்சுப் பார்த்தாக, அது என்னோட சொந்த விஷயமாகவும் ஆகிடாதுங்களா?- ஆகையினாலேதான், இப்ப நானே உங்களை வலியத் தேடி வந்து நிற்கிறேன்; சொல்லுங்க, ஸாரே!-அப்படி என்ன பெரிய விஷயத்தை நீங்க என்கிட்டே பேச நினைச்சிருந்தீங்க?- சொல்லுங்க மகேஷ், சொல்லுங்க!” அவன் பேச்சில் அதிகாரம் மேலோங்கியிருந்தது.

ரதியின் சந்திரப் பிறை நெற்றியில் பளிச்சிட்ட அம்மன் குங்குமத்தில் கேள்விக் குறியும் அதிசயக் குறியும் கொக்கி இட்டுப் பின்னியும் மின்னியும் பளிச்சிட்டன. அவளது விழி நோக்கில், மகேஷ் ரங்கராட்டினம் சுற்றியிருக்க வேண்டும்.

ஆமாம்: மகேஷ் ரங்கராட்டினம்தான் சுற்றிக் கொண்டிருந்தார்-‘பாபு!...என் அருமைப் பாபு...அன்புப் பாபு!... என்டே பாபு!... நீ என்னை இப்படிச் சோதிக்கலாமா? இது தகுமா?---தர்மமா?’--- ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டது போலவும், அப்படிப்பட்டதொரு முடிவுக்கு வருவதைத் தவிர வேறு மார்க்கமே கிடையாது என்கிற ஒரு தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்துக்கு ஆளானவர் போலவும்-ஆளாக்கப்பட்டவர் போலவும் தோன்றிய....

131