பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வானொலியில் சலசலப்பு.

மனம் கொண்ட மகிழ்வு, வாய் கொள்ளாமல் சிரிப்பாக வெடித்தது. குறும்புத்தனம் விகிதாசார அளவில் கூடி நின்றது.

‘ஆனாலும் , ரஞ்சனிக்கு இத்தனை குறும்பு உதவாது. ரஞ்சனி இதயத்தால் சிரித்து விட்டால், எனக்கு எல்லாமே மறந்து போய் விடுகிறதே?’- அவளை ஏற இறங்கப் பார்த்தார் ரஞ்சித்; இறங்க ஏறவும் பார்வையிட்டார் அவர் . ‘இதோட உங்க கணக்குச் சரி!’ என்று இட்டிலிக் கணக்குத்தான் போட்டிருப்பாள் ரஞ்சனி, என் ரஞ்சனி! உண்மையை மறைக்கத் தெரியாத புண்ணியவதியாக்கும்! -மெய்ம்மறந்தார். வீம்பு படித்துக் காற்றிலே வம்பு பிடித்த புடவையைச் சரிசெய்து கொண்டிருந்தவளை நெருங்கி, மார்பகத்திலே அலங்கோலமாகக் கிடந்த இரட்டை வடத் தென்னம்பாளைத் தாலிச் சங்கிலியைச் சரிசெய்து சோளியின் இருமருங்கிற்கும் மையமாக அதைப் பதிய வைத்தபோது, தேள் கொட்டினாற்போன்று ஏனோ ஒர் அரைக்கணம் திடுக்கிட்டுப் போனார். ‘மாங்காட்டுத் தாயே!’--மனம் ஒன்றின பிரார்த்தனையில், மனம் தெளிந்து வருகிறது; நிம்மதியும் தெளிந்து வருகிறது. ஓ!-ரஞ்சனிக்கு இன்னமும்கூட வெட்கம் தெளியவில்லை. அதுவும் நல்லதற்குத்தான். நிதானம் அடைந்துவிட வேண்டும். பசித்தவன்தான் பழங்கணக்கைப் பார்ப்பான். இப்போதைக்கு எதையும் நினைக்கக் கூடாது. நினைப்பதற்கும் மறப்பதற்கும்தான் வாழ்க்கைத் தவமோ?

பால்கனியில் இசைத் தட்டுக்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. ‘ரெகார்ட் ப்ளேயர்’!

மேலைநாட்டுச் சங்கீதத்துடன் விளையாடுவதென்றால், நந்தினிக்கு மிகவும் இஷ்டம்.

29