பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்

95



பிறகு தன் அரசாங்கக் கடமையை நிறைவேற்றலானான். ஒலைச் சேதியைப் பிரகடனப்படுத்தினான் :

“சிருங்காரபுரி நாட்டுப் பிரஜைகளுக்கு பெருமைமிக்க அரண்மையின் ஆட்சிக் குழு மகிழ்ச்சிப் பெருக்குடன் தெரிவிப்பது யாதெனில், நம் மாண்பு கெழுமிய மகாராணியார் அவர்கள் ஒர் ஆண்மகவைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். தாயும் சேயும் நலமாயிருக்கிறார்கள். எல்லாம் நம் மதிப்புக்குரிய மேன்மை பொருந்திய மாமன்னர் கைதொழும் எம்பிரான் கந்தவேளின் கடாட்சமேயாகும். ஆகவே, ஆண்டவனை எண்ணி மன்னர் குடும்பத்தின் வளப்பத்திற்காக ஒரு கிழமை தோத்திரம்செய்து விழாக் கொண்டாடி மகிழுங்கள்!”

அவ்வளவுதான் –

மறுகணம் குடிமக்கள் குதித்துக்கும்மாளமிட்டுக் கையொலி எழுப்பினர்.

கூட்டம் கலையத் தொடங்கிய கட்டத்தில், அந்தப் படைத் தலைவன் விசுக்கென்று விரைந்து கூட்டத்தை ஊடுருவினான்.

அதோ... அந்தப் புதிய யுவதி!...

அவள் தாவணியை இழுத்து மூடியவண்ணம், வண்ணம் காட்டி, வனப்புக் காட்டி கற்றுமுற்றும் எதையோ ஆராய்வது போலவும் யாரையோ தேடுவது போலவும் பார்க்கலானாள். அவளை நலியாமல் நெருங்கி, அவளது பூங்கரங்களை இறுகப் பிடித்துக் கொண்டான் படைத்தலைவன். அவள் எதிரி நாட்டின் உளவாளிப் பகுதியை சார்ந்தவளாகவே இருக்க வேண்டுமென்பது அவனுடைய திடமான கருத்து. ஆகவேதான். அப்பெண் முதன் முதலில் கூட்டத்தில் ஒண்டியதிலிருந்தே அவள்பால் ஒரு கண்