4
அன்னக்கிளி
மீது நின்று கவனித்து விட்டு, நாணுற்றவர் போல் உள்ளே ஒடிப்போய், ஜன்னலின் பின் மறைந்தும் மறையாமலும் நின்று பார்வை எறிந்தனர் மங்கையர் சிலர். மாடி அறைச் சாளரங்களின் பின்னே, திரைச்சீலை மறைப்பில் பதுங்கி நின்று கண்டு களித்தனர் காரிகையர் சிலர்.
தங்கள் தோற்றம் பார்வை பலவற்றைக் கவர்ந்திழுக்குக் காந்தமாய் மிளிர்வதை உணர்ந்த பெருமை முகத்திலே ஒளி செய்ய, குதிரைகள் மீது எடுப்பாக அமர்ந்து பவனி சென்றனர் வீரர்கள் இருவரும்.
அவர்களில் ஒருவன் சிறு நகை சிந்தி மென் குரலில் சொன்னான், 'கவனித்தாயா திருமலை?’ என்று.
'உம் உம்' என ஊமை ஒலியை இழையவிட்ட திருமலைக் கொழுந்துவின் கவனம் எங்கோ பதிந்திருந்ததால், அவன் குதிரையின் நடை தளர்ந்தது. சிறிது முன் சென்றுவிட்ட மற்றவன் திரும்பிப் பார்த்தான். நண்பனின் கண்ணோட்டத்தைக் கவனித்து, அவன் பார்வையின் குறியாக விளங்கிய பொருளையும் நோக்கினான். அவன் இதழ்களில் குறும்புப் புன்னகை நெளிந்து மறைந்தது. வெட்டி மடியும் மீன் வீச்சு போல.
ஓங்கி உயர்ந்து நின்ற மாளிகை மாடி ஒன்றின் பலகணி ஊடே தெரிந்தது ஒரு முகம். அது சுடர்தெறிக்கும் விழிகளால் திருமலையைக் கவனித்தது. திடுமெனப் பின் வாங்கியது.
பெருமூச்செறிந்த திருமலைக்கொழுந்து குதிரையை முடுக்கினான். தோழன் அருகே சேர்ந்ததும் 'என்னப்பா மருது! திடீர் யோசனையில் தவறி விழுந்து விட்டாய்?' என்றான்.