பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அன்னக்கிளி

2. ஜோடி தேடிய மாடப்புறா

ரவு. கொற்கையின் சிறப்புக்களை இருள் மூடி மறைத்துவிட முயன்றும், முழு வெற்றிபெற முடியாமல் கிடந்தது.

வீதிகளின் மூலைக்கு மூலை தெரு விளக்குகள் எரிந்துக் கொண்டிருந்தன. அவை தங்களைச் சுற்றிலும் சிறிது ஒளி பரப்பினும், சூழ்நிலை இருட்டை அதிகப்படுத்திக் காட்டியது

நேரம் அதிகமாகி வீதிகளில் ஜன நடமாட்டம் குறைந்தது. ஒளி கக்கும் பந்தங்களை ஏந்திய காவலாட்கள் மாத்திரம் அவ்வப்போது அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தனர்.

பல வீடுகளில் அமைதியும் இருளும் கவிந்து விட்ட போதிலும், சில பெரிய மாளிகைகளிளும் நிலையங்களிலும் ஒளி மிகையும் உவமைக் கூச்சலும் கோலாகல நடம் பயின்றன. இன்பத்தை விலைக்கு விற்பவர்களும் விலை கொடுத்துப் பெறக் காத்திருந்தவர்களும் எழுப்பிய கேளிக்கைக் கூச்சல்கள் சில பவனங்களிலே செல்வபோகத்தில் நீந்தி களிக்கும் சீமான்களும் சீமாட்டிகளும் சிதறிய உல்லாசக் கூவல்கள் சில இல்லங்களிலே. அங்கெல்லாம், விண்ணகத்தின் நட்சத்திரங்களோடு போட்டியிடுவன போல், அலங்கார விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன.

அம் மாளிகையிலும் விளக்குகள் கதிரொளி கக்கி மிளிரத் தவறவில்லை. சர விளக்குகளும் குத்து விளக்குகளும் வெள்ளியில் உருவாகி நெய்யில் மிதந்த திரிகள் மூலம், பொன் சுடர் தாங்கிக் குளுமையான ஒளியைப் பரப்பிக் கொண்டு எழிலுற்று விளங்கின.