8
அன்னக்கிளி
மில்லை. நீராடிவிட்டு உலரப்போட்டதுபோல் நீளத் தொங்க விட்டிருந்தாள். குழற்கற்றைகளில் சில கழுத்தின் இரு புறத்திலும் பிரிந்து, தோளுக்கு அணியாய்ப் புரண்டு கிடந்தன. பெரும் பகுதி பின்புறம் பரந்து படர்ந்திருந்தது.
அடுக்கிய தலையணைகள்மீது உடலின் மேல்பகுதியைச் சாய்த்து, ஊன்றிய ஒரு கையின் மீது தலையைத் தாழ்த்தி, கால்களை ஒய்யாரமாக மடித்து ஒடுக்கி, ஓய்ந்திருக்கும் மோகினி எனக் கொலுவிருந்தாள் அவள். சேலையின் ஒரு பகுதி அழகுத் தோரணம்போல் தொங்கியது. ஊஞ்சலின் அசைவுக்கு ஏற்ப, அது ஆடி அசைந்தது அவள் தோற்றத்தின் அழகையும் இனிமையையும் அதிகப்படுத்திக் காட்டியது.
அவளுக்கு வயது இருபத்தெட்டு ஆகிறது என்றாலும் அவளுக்குப் பதினெட்டு வயதுதான் என்று சொன்னால், யாரும் மறுக்க முடியாது. இளமை துளும்பும் கட்டழகுக் குமரியாகத்தான் காட்சி அளித்தாள்.
அவள் காதுகளில் தொங்கிய அணிகளும் கழுத்தை அலங்கரித்த நன்முத்து மாலையும் கைகளில் புரண்ட ஆபரணங்களும் அவளது செல்வ நிலையை மட்டுமின்றி ரசனை உள்ளத்தையும் உணர்த்துவனவாய்த் திகழ்ந்தன.
தமிழகத்துச் சிற்பி மலையாளத்துத் தந்தத்திலே ஆக்கிய கொல்விப்பாவை என மின்னினாள் அவள், கண் வீச்சினால் ஆடவர் நெஞ்சில் காம நஞ்சை விதைக்கும் சக்தி பெற்றிருந்த அக் கோமளவல்லியின் பெயர் அமுதவல்லியாம்! தனது ஆசைக்கு உரியவர்களிடம் சிரித்துச் சிரித்துப் பேசி, அளப்பரிய இன்பம் அளிக்கும் தன்மை பெற்றிருந்த அச் சிற்றிடைச் சிங்காரி கிடைத்தற்கரிய அமுதம்தான் என எண்ணிப் பெருமூச்சு விடும் 'மன்மதர்' கள் எத்தனையோபேர் உண்டு அந்த வட்டாரத்திலே.