பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

அன்னக்கிளி

 எச்சில் செய்யப்பட்ட கனியையா நான் விரும்பப் போகிறேன்!' என்று குத்தலாகச் சொன்னான் ஆந்தை.

அது அவளை மிகுதியும் அவமானப்படுத்தியது போன்றிருந்தது. அவளோ செய்யும் வகை அறியாது, கூண்டினுள் ஒடுங்கிக் கிடந்து மிரள மிரள விழிக்கும் புலி போல் தான் தோன்ற முடிந்தது.

அன்னக்கிளியின் உடல் நடுங்கியது. தென்றலில் துடிக்கும் இளந் துளிர்போல. எயில் ஊர் ஆங்தை, எலியை அள்ளி எடுக்கத் தனது கொடிய பாதத்தை நீட்டும் பூனை மாதிரி, கோரமான தன் கைகளை அவள் பால் நீட்டியவாறு முன்னே முன்னே நகர்ந்தான்.

அமுதவல்லி கண்களில் அச்சம் படர, வாய் பிளந்து நின்றாள். எங்கோ வீதியின் ஒரு முனையில் இரவுக் காவலாட்கள் எழுப்பிய கூவல் ஒலி காற்றில் மிதந்து வந்தது. வைகறையின் வெள்ளொளி பரவி விட்டதாக பால் மய நிலவின் நரை ஒளியைக் கண்டு மயங்கிய, காகம் ஒன்று தோட்டத்தின் ஒரு பக்கம் தனிக் குரல் கூவி ஒடுங்கியது. வழி தவறிய கொக்கோ, இரவு நேரப் பறவை எதுவோ, வான வெளியிலே திரியும் போது "க்ராங்’ எனும் கரகரத்த ஒலியை நழுவ விட்டுச் சென்றது. இவற்றோடு கலந்து வந்தது குதிரைகளின் காலடி ஓசை.

தனது இரை நிச்சயம் தன் பிடியில் சிக்கிக் கொள்ளும் என்ற திடசித்தத்தோடு, விழிகளில் குறும்பு நோக்கும், உதடுகளில் பசிச் சுழிப்பும், பற்களில் வெறித்தனமும் மிளிர அடி எடுத்து வைக்கின்ற மிருகம்போல, ஆந்தையும் நகர்ந்தான்.