பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாசக உலகத்தின் பெரும் பகுதியினரது ஆசையை நிறைவேற்றுவதற்காகவே சரித்திர நாவல்களும் (வரலாற்று ஆதாரங்கள், பெயர்கள் முதலியவற்றை ஓரளவுக்கு அடிப்படையாகக் கொண்டவை), சரித்திரக் கதை என்ற மேல் பூச்சு பெற்ற சுவையான கற்பனைக் கதைகளும் பிறக்கலாயின. இவ்விரண்டு ரகப் படைப்புகளும் தமிழ் மொழியில் மிகுதியாகவே தோன்றியுள்ளன. கதைச் சுவை, விறுவிறுப்பு, வளமான கற்பனை, மிடுக்கான நடை முதலியன இந்த ரக சிருஷ்டிகளுக்கு அதிகமான நயம் சேர்க்கும்.

'அன்னக்கிளி' எனும் 'சரித்திரக் கற்பனை'யும் இப்படி ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் பிறந்ததேயாகும். படிப்பதற்குச் சுவையான இந்த நவீனம் சிங்கப்பூர் 'தமிழ் முரசு’ பத்திரிகையில் பிரசுரமாயிற்று. இவ்வாறு ஒரு "சரித்திரக் கற்பனை'யை சிருஷ்டித்துத் தரும்படி தூண்டி, அதைத் தமது பத்திரிகையில் வெளியிட்டு எனக்கு உற்சாகம் அளித்த 'தமிழ் முரசு’ ஆசிரியருக்கு எனது நன்றி உரியது.

தனது லட்சியப் பாதையில் எதிர்ப்படும் சிரமங்களை எல்லாம் சகித்துக் கொண்டு, 'வெற்றி பெறுவது உறுதி' என்ற நம்பிக்கையோடு தமிழுக்குத் தொண்டாற்றி வருகிற நண்பர் தோ. ந. வீரராகவன் அவர்கள் எனது முதல் 'சரித்திர நாவலா'கிய 'விடிவெள்ளி'யைப் பிரசுரித்ததோடு, 'அன்னக்கிளி'யையும் புத்தகமாக வெளியிட முன்வந்தது அவரது துணிச்சலையும், ஆர்வத்தையும், என்னிடம் அவர் கொண்ட அன்பின் உயர்வையும் காட்டுகிறது என்றே நான் கருதுகிறேன். அவருக்கு எனது அன்பும் கன்றியும் என்றும் உரியன.

திருவல்லிக்கேணி,
9–12–1962.
வல்லிக்கண்ணன்.