பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

55

 முகமும், அருள் ஒழுகும் விழிகளும் அவள் கண்முன் தோன்றித் தோன்றி அவளுக்கு உவகையூட்டின. அவன் நினைப்பில் லயித்தபடி நடந்த அன்னத்துக்கு அளவிலா மகிழ்ச்சிதரும் வகையில் எதிரே குதிரை மீது திருமலையே வந்து கொண்டிருந்தான்.

அவன் அவ்வேளையில் வந்தது-அதுவும் அருகே தோழன் இன்றித் தனியாக வந்தது-அவளுடைய ஆனந்தத்தை அதிகப்படுத்தியது. அவள் அகமும், முகமும் மலர, படபடக்கும் விழிகளை அவன் மீது பதித்து, சற்றே விலகி நின்றாள்.

திருமலையும் அவளைக் கண்டதால் எழுந்த மகிழ்ச்சியோடு குதிரையை விட்டுக் கீழே குதித்து அருகடைந்தான். 'உன்னே இவ்வேளையில் இந்த இடத்தில் காண முடியும் என்று நான் எண்ணவே இல்லை அன்னம்!' என்றான்.

'நானும் உங்களை எதிர்பார்க்கவில்லை என்று கூறி, அவள் ஆசையோடு அவன் முகத்தையே பார்த்து நின்றாள், அவன் விசாரிக்கவும், அவள் கடமை மேல் செல்வது பற்றி எடுத்துரைத்தாள். தன் உள்ளத்தை உறுத்திய இதர விஷயங்களை அவள் வெளியிடவேயில்லே.

அவளுக்கு அவனோடு என்ன பேசுவது என்றே புரியவில்லை. அவனுக்கும் அவளிடம் பேச்சு கொடுத்துப் பேச்சு பெறவேண்டும் என்று தோன்றவில்லை. இருவரும் விழியோடு விழி சேர்த்து, முறுவல் கூட்டி நிற்பதிலேயே எவ்வளவோ விஷயங்களை உணர முடிந்தது. ஆகவே, அவர்களிடையே பேச்சுக்குப் பொருள் இல்லை எனும் நிலை நீடித்தது.

திடீரென்று இருவரும் சிரித்தார்கள்.