பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

69

 'இரவிலே சூரத்தனங்கள் எல்லாம் செய்தாயே. இப்பொழுது அந்த வீரம் எங்கே?' என்று உறுமினான் அவன்.

எந்நேரமும் கூரிய நகங்கள் நிறைந்த பாதத்தை நீட்டித் தன்னை அகப்படப் பற்றி, குருதி எழக் குத்திக் குதறத் தயாராக நிற்கும் கடுவன் பூனையின் பார்வையால் கட்டுண்டு, தன் வசமிழந்து - செயல் திறமற்று - மயங்கிக்கிடக்கும் சிறு பறவைபோல்தான், அன்னக்கிளியும் நின்றாள் அக்கொடியவன் முன்னிலே.

காலமும் நகராது நிற்பது போலவே தோன்றிற்று.

கனியைக் கொய்திடக் கை நீட்டினேன். முட்கள் குத்தின. சுள்ளிகள் கீச்சின. இது வேண்டாம் என்று விலக எண்ணினேன். கனி தானாகவே என் கையில் வந்து விழுந்தது? ஆகா இதல்லவா நல்வாய்ப்பு!’ என்று அவன் மகிழ்வுப் பெருக்குடன் பேசினான்.

அவள் என்ன செய்வது, இக் கயவனிடமிருந்து எப்படித் தப்புவது என்று விளங்காதவளாய்த் தவித்து நின்றாள்.

'என்ன, கிளி வாயைத் திறக்கவே மாட்டேன் என்கிறதே? அப்புறம் எனக்குப் பொழுது போவது எப்படி?' என்று கேலியாகச் சொன்னான் அவன்.

'நான் திருமாறனைக் காண வந்தேன். அவரைக் கண்டு பேச வேண்டும்’ என்று மென் குரலில் மொழிந்தாள் அன்னம்.