பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

77

 ஒதுக்கிடத்தில் விட்டெறிந்தான். எயில் ஊர் ஆந்தைக்குப் பிறர் உயிர் பறித்தல் என்பது ஓர் சிறுகதையாம்! அதன் பின்னரே ஆந்தை அமுதவல்லியின் வீடு சேர்ந்தான். மறைந்து காத்திருந்து, திருமாறன் வரமாட்டார் என்று புரிந்து கொண்டபிறகே அவன் துணிந்து செயலாற்றினான். அவனுடைய செயல்களுக்கு அவன்தான் பொறுப்பு. திருமாறன் எதுவும் அறியார்.

இரை வஞ்சிக்கப்பட்ட புலி தனது குகை நாடிக் கடுஞ்சினத்தோடு திரும்புவது போல், திருமாறன் தமது இல்லம் புகுவதைக் கண்ட திருமலையும் மருதுவும் 'ஐயாவுக்கு உள்ளம் சரியாக இல்லை போலும்! அடுத்தது காட்டும் பளிங்காகும் முகம் கடுகடுப்பை அல்லவா காட்டுகிறது!’ என்று பேசிக் கொண்டார்கள்.

'அவர் மனநிலை எப்படி இருந்தால் நமக்கு என்ன?' என்றான் திருமலை.

இருவரையும் பார்த்ததும் திருமாறன், 'திடீரென்று வந்து நிற்கும் நீங்கள் இரண்டு பேரும் யாரோ? எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று கேட்டான்.

'நான் திருமலைக்கொழுந்து. இவன் என் நண்பன் மருதுபாண்டியன். இருவரும் மதுரை மன்னரிடமிருந்து வருகிறோம்' என்று திருமலை அறிவித்ததும், திருமாறன், உள்ளத்தில் சிறிது குழப்பம் ஏற்பட்டது. எனினும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், அவர்களின் வருகையால் மகிழ்வு கொண்டவர் போல் முகமலர்ச்சியோடு உபசரித்தார். மதுரையைப் பற்றியும், மன்னர் குறித்தும், அவர்களுடைய பயணம் பற்றியும் விசாரித்தார்.