பக்கம்:அன்னக்கிளி (வல்லிக்கண்ணன்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்னக்கிளி

83


நோய்வாய்ப்பட்டு இறந்துபோனான். இயற்கை அளித்த தண்டனை போலும் அது!

இதை எண்ணியபோது அமுதவல்லியின் நெஞ்சு வெடித்துவிடும்போல் துயர் மூச்சு பொங்கி எழுந்தது. அழ வேண்டும் எனும் உணர்ச்சிகூட ஏற்பட்டது. அவன் பார்வை தோப்பின் பக்கமுள்ள சாளரத்தின் வழியாக வெளியே படர்ந்து நிலை குலைத்தி நின்றது.

தோப்பில், வெயிலும் நிழலும் கோலமிட்டிருந்த இருண்ட பகுதியில், வெள்ளைவெளேர் என்று அசைவது தான் என்ன? முக்காடிட்டு, உடலையும் நன்கு போர்த்துக் கொண்டு நடமாடுகிற உருவம் யாருடையதாக இருக்கக் கூடும்? முன்பு அவள் பார்த்தபோது நிகழ்ந்தது போலவே, இப்பொழுதும் அது நடந்து வந்து, ஓர் இடத்தில் நிற்கிறது. வானுற ஓங்கி நெடிதுயர்ந்து வளர்ந்த பெரிய மரத்தின் கீழ், மறைவான ஒரு இடத்தில் குனிந்து சிறு மூட்டை ஒன்றை எடுத்து, போர்வைக்குள் பதுக்கிக்கொண்டு, அது முன்போலவே அடர்ந்த தோப்புக்குள் ஓடி மறைகிறதே. இதன் பொருள் என்ன? அந்த உருவம் எடுத்துச் செல்லும் மூட்டையில் என்னதான் இருக்கும்? அதை யார் அங்கே எதற்காக கொண்டுவந்து வைக்கிறார்கள்?

மெளனமாக ஒரு நாடகத்தை-குறித்த ஒரு திட்டத்திற்கு ஏற்ப இயங்கும் பாவைக் கூத்தின் ஒரு காட்சியை- மீண்டும் காண நேர்ந்த அமுதவல்லி எதையும் விளங்கிக் கொள்ள முடியாதவளாய், அத் திசையையே வெறித்து நோக்கிக்கொண்டிருந்தாள். அக்காட்சியின் புதுமையால், அது தந்த அதிர்ச்சியால், திகைப்பினால், அவள் தனது கவலைகளையும் குழப்பங்களையும் அந்தக் கணத்துக்கு மறந்து விட்டாள்.