பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

இருந்தான். கப்பல் வனத்தின் மரங்களின்மேல் இறங்கி அவைகளின் கிளைகளில் சிக்கிக் கொண்டது.

மன்னன் தெளிந்து எழுந்ததும், 'கடவுளை நான் முறியடிப்பேன்! அப்படி நான் சபதம் செய்திருக்கிறேன். என் சொல்தான் சட்டம்! என்று கர்ச்சனை செய்தான். ஆகாயத்தில் பறந்து செல்ல மாபெரும் கப்பல் ஒன்றை அவன் மறுபடி கட்டத் தொடங்கினான். அந்த வேலை ஏழு ஆண்டுகளாக நடந்து வந்தது. இடிகளைப்போல் தாக்கக்கூடிய உருக்குக் குண்டுகளும் பீரங்கிகளும் அதில் ஏராளமாக இருந்தன. அவைகளைக் கொண்டு சுவர்க்கத்தின் கோட்டைகளைத் தகர்க்க வேண்டும் என்பது மன்னன் எண்ணம். பல நாடுகளிலிருந்து அவன் படைகளையும் கொண்டு வந்து குவித்தும் வைத்துக் கொண்டான். கப்பல் வேலை முடிந்ததும், படை வீரர்கள் அதில் ஏறித் தத்தம் இடங்களில் போய் நின்று கொண்டனர். மன்னனும் ஏறித் தன் ஆசனத்தில் அமரச் சென்றான். அந்த நேரத்தில் கடவுள் ஒரு சிறு கொசுப்படையை அனுப்பி வைத்தார். கொசுக்கள் ஒரே கூட்ட மாக மன்னனைச் சுற்றி ஒலி செய்து கொண்டு, அவன் முகத்தையும் கைகளையும் கடிக்கத் தொடங்கின. அவன் கோபத்தால் கொதித்துத் தன் உடைவாளை உருவினான். அதைக் கொண்டு அவன் காற்றைத் துழாவ முடிந்ததே தவிர, கொசுக்களை எதுவும் செய்ய முடியவில்லை. உடனே அவன் மதிப்புயர்ந்த பல கம்பளிகளைக் கொண்டுவரச் செய்தான். 'இவைகளைக் கொண்டு என் உடல் முழுவதும் சுற்றிச்சுற்றிப் போர்த்தி வையுங்கள்" என்று தன் பணியாளர்களுக்குக் கட்டளை யிட்டான். அவர்கள் அவ்வாறே கொசுக்கள் நுழைந்து விடாதபடி நன்றாகப் போர்த்தினார்கள்.

ஆனால் ஒரு கொசு மட்டும் மன்னனின் உடலோடு ஒட்டியிருந்த கம்பளிக்குள் நுழைந்து விட்டது. அது மெல்ல மெல்ல அவன் செவி கரை ஏறி, கடைசியில் செவிக்குள்ளே சென்று, செவியின் உட்குருத்தைக் கடித்து விட்டது!. அவ்வளவுதான், நெருப்புப் பற்றி எரிவது போல் மன்னன் துடித்தான். விஷம் தலைக்கேறி விட்டது. அவன் எழுந்து குதித்தான்; தன்னைச் சுற்றியிருந்த கம்பளிகளையெல்லாம் வாளால் வெட்டி யெறிந்தான்; தன் உடைகளையும் கிழித்தெறிந் தான், ஆடையின்றி நிர்வாணமாகவே அவன் நடனமாடத் தொடங்கினான். சுற்றிலும் நின்று பார்த்துக் கொண்டிருந்த படைவீரர்கள், சிரிப்புத் தாங்காமல், கடவுளின் கோட்டைகளையே வெல்லக் கிளம்பிய இந்த மன்னரைத்தான் ஒரு சிறு கொசு வென்று விட்டது!' என்று பரிகாசம் செய்தனர்.