பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தோட்டத்தின் வழியாக நடந்து கொண்டே சென்றால் நெடிய மரங்கள் அடர்ந்த வனங்களை அடையலாம். அவைகளுக்கும் அப்பால் ஆழமான கருங்கடலில் கப்பல்கள் ஓடிக்கொண்டிருந்தன. மேலே மரங்களின் கிளைகளும், கீழே கப்பல்களும் பார்க்க அரிய காட்சியாயிருந்தன. அந்த மரங்களினிடையே ஒரு குயில் வசித்து வந்தது. மீனவர்கள் அதன் இசையைக் கேட்பதில் ஈடுபட்டு, தங்கள் வேலைகளைக்கூட மறந்து ஓடங்களில் சாய்ந்திருப்பார்கள். எவ்வளவு இனிமையாகப் பாடுகின்றது!' என்று அவர்கள் வியப்பார்கள். பிறகு இரவிலேயே மீன் பிடிக்க வேண்டியிருந்ததால், அவர்கள் குயிலை மறந்துவிட்டுக் கடலில் வெகுதூரம் செல்வார்கள். மறு நாள் இரவிலும் அதே கீதத்தைக் கேட்டு, அவர்கள், எவ்வளவு இனிமையாகப் பாடுகின்றது!' என்று ஆச்சரியப்படுவார்கள்.

சக்கரவர்த்தியின் தலைநகருக்கு உலகின் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் பிரயாணிகள் வந்து கொண்டே யிருந்தனர். அவர்கள் எல்லா விஷயங்களையும் ஆர்வத்தோடு பார்த்து மெச்சினார்கள். அவர்களில் கல்வி அறிவு மிகுந்தவர்கள், திரும்பிச்சென்றபின் நாட்டைப் பற்றியும், நகரத்தைப் பற்றியும், அரண்மனைகளைப் பற்றியும், தோட்டம் பற்றியும் பெரிய நூல்கள் எழுதி விவரித்திருந்தார்கள். ஆனால் கருங்கடல் அருகே வனத்தில் வசித்து வந்த கருங் குயிலைப் பற்றிக் குறிப்பிடாதவர் எவருமேயில்லை. அதுவே தாங்கள் கண்டவற்றிலெல்லாம் முதன்மையானது என்று அவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.

அந்நூல்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்றன. நாளடைவில் அவைகளில் சில சக்கரவர்த்தியின் கையிலும் வந்து சேர்ந்தன. அவர் தமது தங்க நாற்காலியில் அமர்ந்துகொண்டு, தம் நகரைப் பற்றிய விமரிசனங்களைப் படித்துத் தலையை ஆட்டிக்கொண்டு இன்புறுவார். அரண்மனை, தோட்டம், வனங்கள் முதலியவை பற்றிய வர்ணனைகளுக்குப் பின்னால், 'ஆனால் எல்லாவற்றினும் சிறந்தது கருங்குயில்' என்று அவைகளில் குறிக்கப் பெற்றிருந்தது'.

'இது என்ன விசித்திரம்? குயிலாமே, குயில்?' என்று சக்கரவர்த்தி திகைத்தார். இதைப் பற்றி எனக்கே எதுவும் தெரியாது, ஆனால் பார்த்தவர்கள் பரவசப்பட்டு எழுதியிருக்கிறார்கள்! என் இராஜ்யத்தில், எனது சொந்தத் தோட்டத்திலேயா அது இருக் கிறது! இதைக் கண்டு பிடிக்க நான் வெளிநாட்டுப் புத்தகத்தை