உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

87



மாலை நேரமா? மீண்டும் மகாத்மாவுக்கு உணவுத் தயாரிப்பு மேற்பார்வை; ஆசிரம வாசிகளுக்குத் தயாராகும் உணவு மேற்பார்வை; வருவோர் போவோர், தங்குவோர் விருந்தினர் உபசரிப்புக்களின் கண்காணிப்பு ஆகிய வேலைகளைத் திட்டமிட்டு, அங்கங்கே தேனீ போலப் பறந்து, சரியாக நடக்கின்றதா வேலைகள் என்பதை நோக்குவார்.

அவர் மாலை உணவு உண்பதை நிறுத்தி விட்டார்; வெறும் காப்பிமட்டும் அருந்துவார்; அதையும் சில மாதங்கள் கழித்து நிறுத்தி விட்டார்.

அடிகள் மாலை வேளைகளில் உலாவச் சென்றதும், இவர் ஆசிரம நோயாளிகளைப் பார்த்து அவர்களது தேவைகளை நிறைவேற்றுவார்.

உலாவி விட்டு அடிகள் வந்ததும், ஆசிர்ம வழிபாடுகள் நடக்கும்; அந்தப் பிரார்த்தனை வழிபாடுகளில் கஸ்தூரி பாய் முழுப் பங்கேற்றுக் கலந்து கொள்வார் இராமாயணம், கீதையின் கருத்துகளை அந்த வழிபாடுகளிலே ஆசிரம மக்களுக்கு எடுத்துக் காட்டி நெறிப்படுத்துவார். மாலை நேர பிரார்த் தனைகளில் பெரும்பாலும் கஸ்தூரி பாயின் ஆன்மீக தர்பார்தான், அமர்க்களமாக, கோலாகலமாக தினசரி நடைபெறும்.

ஆசிரமப் பெண்கள், சேவா கிராமத்தில் வசிக்கும் பெண்கள் எல்லாரும் கஸ்தூரி பாய் அருகே உட்கார்ந்து பஜனை பாடுவார்கள்.

ஆன்மீக வழிபாடுகள் முடிந்ததும், இரவு உணவு வகைகள் எல்லாருக்கும். பொதுவாக நடைபெறும். இறுதியாக காந்தியடிகளது படுக்கைக்கான ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து விட்ட பின்பு, தனது அறையிலே வந்து உறக்கம் கொள்வார்.