பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

29

காதல் என்றால் 'ஒருவன் ஒருத்தியிடமும், ஒருத்தி ஒருவனிடமும் எந்த நிலையிலும் மாறாமல் கொள்ளும் ஆத்மார்த்திகமான அன்பு' என்று இலக்கியம் சொல்லலாம்; இலக்கணம் சொல்லலாம். வாழ்க்கையும் வையகமும் அப்படியா சொல்கின்றன?- இல்லை; பொறுப்புள்ள காதல் எவ்வளவுக்கெவ்வளவு பஞ்சமாயிருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு பொறுப்பற்ற காதல் வாழ்க்கையிலும் வையகத்திலும் மலிந்து கிடக்கிறது. கவைக்குதவாத இந்தக் காதலை, க்ஷணப் பித்தத்தை, இனக் கவர்ச்சியை, தணியாத தாகத்தை இன்றல்ல; அன்றே நான் வெறுத்தேன். அதாவது, என் கலாசாலை நாட்களிலேயே வெறுத்தேன்.

"ஆஹா! இந்த மாணவர்கள், இவர்களுடைய் கண்கள்- எங்குதான் செல்லட்டுமே, எதைத்தான் பார்க்கட்டுமே; மோனத்தை நாடும் முத்தர் மனத்தைப் போல ஏதாவது 'கலர்' இருக்கிறதா என்றுதானே முதலில் தேடுகின்றன?

'கலர்' என்றால் இவர்களுடைய 'பண்’பாட்டில் என்னவாம் தெரியுமா, பெண்களாம்! இந்தப் பெண்களுக்கு 'மார்க்' கொடுப்பதில்தான் இவர்கள் கைகாரர்களாயிருக்கிறார்களே தவிர, பரீட்சையில் 'மார்க்' வாங்குவதில் கைகாரர்களாயில்லை. இந்த லட்சணத்தில் தலைக்குத் தலை யாராவது ஒருத்தியைப் பார்த்து 'இவளுக்கு இருபத்தைந்து மார்க்குகள் கொடுக்கலாம்; இவளுக்கு ஐம்பது மார்க்குகள் கொடுக்கலாம்; இவளுக்கு நூறு மார்க்குகள் கொடுக்கலாம்’ என்று அவளவளுடைய அழகை மதிப்பிடும் போது எனக்கு எப்படித்தான் இருக்கும், தெரியுமா?-. இவர்களுடைய மூளையை மதிப்பிடத் தோன்றும்;