பக்கம்:அன்பு மாலை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அன்பு மாலை



லாம் நடக்கின்றன. இன்னும் எந்த எந்த இடங்களில் சுவாமிகளை வழிபட்டுப் பக்தர்கள் தம்முடைய அன்பைக் காட்டுகிறார்களோ, தெரியவில்லை. பெரிய கடற்கரையிலே உள்ள பல பல துறைகளில் மூழ்குபவரைப்போல இங்கே வந்திருக்கிற துரைகள் பலர் இருக்கிறார்கள். சுவாமிகளுடைய அருமையான அருள் உள்ளத்தை உணர்ந்து கொண்டவர்கள் அவர்கள், அவர்கள் எல்லாம் பேசினால் அது அவர்களுடைய அநுபவத்தைச் சொல்வதாயிருக்கும். உலகத்திலுள்ள தலைவர்களைப் பற்றிப் பேச வேண்டுமானால் செய்திகளையெல்லாம் சேகரிக்க வேண்டியிருக்கும். இங்குச் சுவாமிகளோடு பழகி, அவர்களுடைய திருக்கண் பார்வைக்கு இலக்காகி, அதனால் பெற்ற அநுபவங்களை யெல்லாம் அவரவர்கள் தனித்தனியே சொன்னாலே அது பெரிய வாழ்க்கை வரலாறு ஆகிவிடும். ஒவ்வொருவர் சொல்வதையும் ஒரு புத்தகமாகவே கூட வெளியிடலாம். சில வெள்ளைக்காரர்கள் மேல் நாட்டிலே அப்படி எழுதியிருக்கிறார்கள். இந்த அநுபவத்தை உணர்ந்தவர்கள் உணர்ந்தவாறே சொல்ல முடியுமானால் அவைகளெல்லாம் சுவையுள்ள புத்தகங்களாக இருக்கும். எது உணர்ச்சி வசப்பட்டு வருகிறதோ, எது அநுபவத்திலிருந்து பிறக்கிறதோ, அதுதான் உண்மையாக இருக்கும். உண்மையே அழகு என்று ஆங்கிலத்திலே சொல்வார்கள். அது அழகாகவும் சுவையாகவும் இருக்கும். அப்படியுள்ள அநுபவங்களை இதோ நாம் கேட்கப் போகிறோம்.

எனக்குப் பின்னாலே பலர் பேசப் போகிறார்கள். நான் வெறும் வாசலைத் திறப்பவனாக இருக்கிறேன். அன்பர் சொன்னார், நான் திறந்து வைப்பேன் என்று. வாயில் காவலன் வேலையை நான் செய்கிறேன். வாசலைத் திறந்து வைக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/10&oldid=1460010" இலிருந்து மீள்விக்கப்பட்டது