பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

55


விரும்பினேன்; தொடர்ந்து அன்புடன் அவளைக் காதலிக்க முடியவில்லை. அதற்காக அவளைக் கொன்றுவிட்டேன்' என்றான். எத்துணைக் கொடுமை! அரசியலிலும் இதுதான்.

ஆனால் சான்றோரின் மேலான அன்பு ஒருகாலும் பொறாமை, கசப்பு, வெறுப்புணர்ச்சி, வன்மம், பகைமை இவை அனைத்தையும் கடந்து கொலை செய்தல் என்னும் அளவுக்கு மாறிடும் என்று கற்பனை செய்யக் கூட முடியாத ஒன்றாகும். மானிட வாழ்வில் ஏற்படும் எல்லாச் சிக்கல்களையும் தீர்ப்பது ஒன்றே ஒன்று அன்புதான்். வாழ்க்கையின் எந்த ஒரு பகுதியேனும் அன்பினால் ஆகாததென ஒன்றும் கிடையாது.

அன்புமிக்க தொழிலாளி ஒருவன் தன் ஊதியத்திற்கான பணியைவிட மேலும் பணி செய்வான்; அதே போன்று வேலை வாங்கும் முதலாளியும் அன்புள்ளம் கொண்டவராக இருந்தாரே யானால் வேலையைச் செய்து அதற்கான கூலியை - ஊதியத்தைக் கேட்கும்போது, தொழிலாளி கேட்கும் தொகையைவிட அதிக மாகவே கொடுப்பார். அவர்களுக்கிடையே தகராறு ஏதும் இருக்காது. மற்றவர்களைவிடத் தொழிலாளியும் கூடுதலாக வேலை செய்வான் முதலாளியும் கூடுதலாக ஊதியம் கொடுப்பார். அதுதான் அன்பின்பாற்பட்டவரிடையே காணப்படும் ஒப்பரும் உயர்குணம் - அருஞ்செயல்!

இத்தகு அன்புப் பரிமாற்றம் வாணிக உலகில் பார்க்க முடியுமா? பார்க்கக் கூடாதா? வாணிக உலகிலும் இத்தகு அன்புப் பிணைப்பு, உறவு, தொழிலாளர் - முதலாளர் இடையே இருக்குமேயானால் நீங்காத ஏழைமை கொண்ட தொழிலாளர் நசுக்கப்படல் நடவாது; நடப்பது தொடராது!

உயிர்ப்பான அன்பியல்பு மாந்தருள் வந்துறையும்போது, அவர்கள் உள்ளே நிலைத்துவிட்ட தடுமாற்றம் ஆளுமை உணர்வு அத்தனையும் வெளியேறிவிடும். இயேசுவின் அன்பு மட்டுமே அவர்கள் அகத்தில் நிறைந்திருக்கும்; பின்பு ஆண்டவரின் அன்புத் திருப்பணிக்குச் சமமான பணிகளே நடைபெறும் மாந்தர் மூலமாக!

எபேசியார் 5:2 “கிறித்து நமக்காக தம்மைத் தேவனுக்கு நறுமணமான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக் கொடுத்து நம்மில் அன்பு கூர்ந்ததுபோல் நீங்களும் அன்பிலே நடந்து கொள்ளுங்கள்".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/59&oldid=1219740" இலிருந்து மீள்விக்கப்பட்டது