பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (நெய்தல்).pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - நெய்தல்


“நற்குணங்கள் அமையப் பெற்றவரே! நற்குணங்கள் அமையப் பெற்றவரே, வாழ்க! பிறரது துன்பமும் தம்முடைய துன்பம் போல எந் நாளும் பேணி அதனால் பெறும் அறத்தை அறிந்து செய்தல் உலகத்தில் உள்ள சான்றோர்க் கெல்லாம் முறைமையானால், உமக்கும் அது முறைமை என எண்ணி உமக்கு ஒன்றைத் தெரிவிப்பேன். அஃது யாது என்றால் ஒருத்தி மழைக்கு நடுவில் மின்னலைப் போல் வந்து தோன்றித் தன்னொளியுடன் தன் வடிவையும் என்னைக் காணச் செய்து, என்னை அளிக்கும் தன்மை உடையவளாய் அளித்துப் பின்பு என் நெஞ்சைத் தான்் வரும் வழியாகக் கொண்டு விட்டாள். அதனால் துயில் கொள்ளாமல் அசையும் அழகையுடைய ஆவிரம்பூவுடனே எருக்கம்பூ மாலையையும் சூடி, வளர்கின்ற பனை மடலால் செய்த குதிரையை மணிகள் ஒலிக்க ஏறி, அந்தப் பாயும் குதிரையை மனத்தில் நிறுத்தி, யான் நீங்காமல் நின்று வருத்தத்தைத் தரும் என் காம நோயைத் தாங்க மாட்டாமல் உண்டான வருத்தத்திற்கு இளைப்பாறுதலாய், இறுகின அணியை அணிந்த மங்கை என்னை வருத்தியதில் ஒரு பகுதியை நான் பாடுவேன். அதைக் கேளுங்கள்.

“தேன் போன்ற சொல்லையுடைய மங்கை தான்் காமு றாது என்னைக் காமம் கொள்ளச் செய்து, காமக்கடலில் அகப்படுத்தி, உசாத்துணை இல்லாத நள்ளிரவிலும், உசாத் துணையுள்ள பகலிலும் மன வருத்தம் என்ற அலைகள் வந்து வருத்துதலால் மாவின்மீது இருக்கின்றேன் என்று மனத்தால் எண்ணியிருந்து, அம் மடல் மா ஒரு தெப்பமாக அந்தக் கடலை நீந்துவேன். அதுவே என் நிலையாகும் என்றான்.

“என்னை மயங்கச் செய்தவள் அதற்கு மருந்தாக இம் மடல் மா. நான் பிழையாமைக்குக் காரணமான காம நோய்க்குப் பிழைக்கும் வழியாய்ச் செய்வதாய் உள்ளது.

“சிறந்த அணியை உடைய மங்கை அழகால் வந்த வருத்தம் என்று நான் கூறும் படியாய்க், காமனின் ஏவலால் வந்த காம நோயாம் படை என்னைக் கண்டார் இகழுமாறு, நான் கலங்க, என்னிடம் வந்து என் ஆண் தன்மையான மதிலைச் சூழ்ந்து புறப் பகுதியை எல்லாம் உடைத்துப் பின் உள்வாயை அழிக்கும்” என்றான்.