பக்கம்:அன்றாட வாழ்வில் அழகுதமிழ்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போது பேராசிரியர் தெ.பொ.மீ. அவர்களின் தூண்டுதலின் பேரில் இரண்டு ஆண்டுகள் சமஸ்கிருத மொழி பயின்றது இந்நூல் உருவாக்கத்துக்குப் பெருந்துணையாமைந்தது. மற்றும் மறைமலையடிகளாரும் அவர்தம் திருமகளார் நீலாம்பிகையம்மையாரும் சமஸ்கிருதச் சொற்களுக்குக் கூறிவந்த தமிழ் நேர்ச் சொற்களின் அடிப்படையிலேயே பல தூய தமிழ் நேர்ச்சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கடந்த 34 ஆண்டுகளாக 'யுனெஸ்கோ கூரியர்' பன்னாட்டுத் திங்களிதழுக்காக தூய தமிழ்ச் சொற்களை ஆங்கிலச் சொற்களுக்கு நேர்ச் சொற்களாக உருவாக்கியிருந்தவைகளின் அடிப்படையிலும் நல்ல தமிழ்ச் சொற்கள் இந்நூலுள் கையாளப்பட்டுள்ளன. சொற்றொகுப்பை உருவாக்கியபோது அது ஐம்பதினாயிரத்துக்கு மேல் நீண்டு விட்டது. அறிவியல் முதல் கவின்கலை ஈராக அவை பல துறை சார்ந்தவைகளாகும். அஃது பெரியதோர் சொற் களஞ்சியத் தொகுதியாயமையத்தக்கதாகும். எனினும் அன்றாட வாழ்வில், நடைமுறையில் பயன்படுத்தத் தக்கனவாக ஐயாயிரம் சொற்களை மட்டும் தேர்ந்தெடுத்து “அன்றாட வாழ்வில் அழகு தமிழ்” என்ற தலைப்பில் நூலுருவில் வெளியிட்டுள்ளேன். நாளடைவில் காலத்தின் தேவைக்கேற்ப இந்நூலை மாற்ற திருத்தங்களுடன் படிப்படியாக விரிவாக்கி வெளியிட எண்ணியுள்ளேன்.

இந்நூலுக்குச் சிறப்பானதொரு அணிந்துரையை வழங்கியிருப்பவர் மாண்பமை நீதியரசர் பு.ரா. கோகுல கிருஷ்ணன் அவர்களாவர். தமிழ்ப் பற்றும் தனித் தமிழ் ஆர்வலருமான அவர்கள் நெடுநாட்களாகவே என் உள்ளுணர்வுகளுக்கு ஒர் உந்து சக்தியாக விளங்கி வருபவர். அவர்களிடம் உரையாடும்போதெல்லாம் தமிழ்வளர்ச்சி