பக்கம்:அபிதா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6 O லா. ச. ராமாமிருதம்


வேண்டும். எல்லா விருந்துக்கும் மருந்து; அதுவே விருந்து, என்ன சொல்கிறாய்?”

“இன்னிக்கும் வத்தல் குழம்புதான்!” சாவித்ரி கை கொட்டிச் சிரித்தாள். அவள் சிரிப்பு விளிம்பு உடைந்த சிரிப்பு. அவள் பற்கள் பளீரிட்டன. (“சாதாரண நெல் உமியைச் சுட்டுக் கரிப்பொடிதான். ஆண்கள் நீங்கள் கொண்டாடும் பேஸ்ட் அல்ல. பேஸ்ட்டுக்கு எனக்குப் பொறுமை கிடையாது.”) சிரிக்கையில் புருவ நடுவில் மூக்குத் தண்டு சுருங்கிற்று.

“உங்கள் மாப்பிள்ளை வரப்போறார்னு என்னிடம் ஒரு வார்த்தை முன்கூட்டிச் சொன்னேளா? இதோ ஒரு நிமிஷம் பொறுத்துக்கோங்கோ. நாம் பேசிண்டிருக்கற நேரத்துக்குச் சர்க்கரையும் சாதமும் நிமிஷமா கரைஞ்சுடும். வீட்டுக்குப் பெண்ணும் நானே, பெண்ணைப் பெத்தவளும் நானேன்னு இருக்கு: நான் என்ன பண்ண முடியும்? அப்பாவே எப்பவுமே இப்படித்தான்! ஆனால் நான் தனியா சொல்ல என்ன இருக்கு? அவர் சுபாவம் இத்தனை நாளில் உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே!”

மனம்விட்ட அவள் சிரிப்பில், என்னுடன் அவள் உடனே நேரிடையாகக் கொண்ட சகஜத்தில், எனக்குத்தன் சம்மதத்தைத் தெரிவித்த முறையில், அவள் பெண்மைக்குப் பங்கம் கற்பிக்கும்படியில்லை. அவள் சொன்னபடி, அவள் சூழ்நிலை அப்படி.

ஆனால் சாவித்ரி ஒன்றும் சோடையில்லை. அவள் தனியழகு ஏதும் செய்து கொள்ளவில்லை.

ஆனால் செல்வத்துக்கே ஒரு களையுண்டு.

பிறவியிலேயே வளத்துக்கு ஒரு தோரணை உண்டு.

உத்யோகம் தந்தவன் கடவுள்.

பெண்ணைத் தந்தவன் மாமனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/12&oldid=1125588" இலிருந்து மீள்விக்கப்பட்டது