பக்கம்:அபிதா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அபிதா O 7


மாமனாரானதோடல்லாமல், அந்தச் சுருக்கில், அதே சாக்கில், பாட்டாளியிலிருந்து வியாபாரத்தில் என்னைத் தன்னோடு கூட்டாளியாகவும் ஆக்கிக் கொண்டபின், எங்களுக்குக் கண்மறைவாக, ஆனால் தவறாமல் எங்கள் காது படும்படி எனக்கு Double Event என, சிப்பந்திகளிடையே பேர் வழங்கலாயிற்று. முதலாளிக்கு மாப்பிள்ளை, சொத்துக்கும் தத்து.

ஆனால் அவர்கள் ஆத்திரத்தில் ஆச்சரியமில்லை. என் அதிர்ஷ்டம் எனக்கே ப்ரமிப்பாயிருக்கிறதே! கண்கூடாக நடப்பது கொண்டே கதை எழுதியாகிறதென்றாலும் கதையில் படிப்பது அனுபவமாக நிகழ்ந்திடில், அது சமாதானமாவதில்லை. அதில் கதையின் இன்பமில்லை. ஒரு தினுசான பீதிதான் தெரிகிறது. எந்தச் சமயம் கனவு கலைந்து எப்போ நனவில் விழிப்போம் எனக் கனவு கலையும் சமயத்திற்கஞ்சி நனவை நானே எதிர்கொள்ளக் கண்ணைக் கசக்கிக்கொள்கிறேன். ஆனால் நான் காண்பதாக நினைத்துக் கொள்ளும் கனவேதான் நான் கண்விழித்த நனவு எனத் தெளியத் தெளியக் குழப்பம்தான் கூடுகிறது.

மணமான புதிதில் சாவித்ரி என்னையடையத்தான்தான் அதிர்ஷ்டசாலி என்று சொல்லிக் கொள்ளும்போது எனக்கு ஒரு கேள்வி. அவள் பேச்சில் உபசாரம் எவ்வளவு, உண்மை எவ்வளவு?

உண்மையில் கேலியா?

உண்மையே கேலிதானா?

ராஜா மணந்த பிச்சைக்காரி ராணியாகிவிடலாம்;

ஆனால் ராணி மணந்த ஏழை, ராஜா இல்லை. என்றும் அவன் பிரஜைதான்.

இப்படி எனக்குத் தோன்றக் காரணம் என் சந்தேக மனப்பான்மைதானோ, அல்லது ராணியை மணக்கும் உச்சத்துக்கு உயர்ந்தபின் அதனாலேயே நேர்ந்த உச்சக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/13&oldid=1125595" இலிருந்து மீள்விக்கப்பட்டது