பக்கம்:அபிதா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அபிதா O 9

ஆனால் பாம்புக்குப் படம் படுத்ததால் அதன் கோபம் தணிந்ததென்று அர்த்தமில்லை. சீற்றத்தின் வாலில் தொற்றி வந்த எங்கள் சமாதானமும் மூர்க்கம்தான். உண்மையில் அது சமாதானம் அன்று. வெட்கம்கெட்ட இளமை வெறி. அப்பட்டமான சுயநலத்தின் சிகரம். சண்டைவழி நிறைவு காணாத வஞ்சம் சதைமூலம் தேடும் வடிகால். ஊன் வெறி தணிந்ததும் மறுபடியும் தலைகாட்டுவது அவரவர் தனித்தனி எனும் உண்மைதான். தெளிந்ததனாலாய பயன் கசப்புத்தான்.

ஒரு கூட்டில் இரு புலிகள் வளைய வந்தன. ஒன்றையொன்று கவ்விக் கிழித்துக் கொண்டு ஒன்றில் ஒன்று புதைந்து ஒரு பந்தாகி உருள்கையில் எந்தச் சமயம் சண்டையிலிருந்து சமாதானம், சமாதானத்திலிருந்து சண்டையென்று அவைகளே அறியா. மூலக் குரூரத்தின்இரு விள்ளல்கள்.

இம்மாதிரி முரட்டு வேளைகளின் அசதியின் இன்பமயக்கத்தில் முனகுவாள்.

“ஒரு குழந்தையிருந்தால் நமக்குள் இவ்வளவு வேற்றுமையிருக்குமா?”

“அது ஒண்னுதான் குறைச்சல். எங்களால் முடியாமல் உங்களால் முடிந்தது இந்த குழந்தை பெறுதல் ஒன்றுதானே!”

அவள் எழுந்து உட்காருவாள். மறுபடியும் எங்கனைச் சூழ்ந்த அந்தரம் சிலிர்க்கும்.

“எங்கள் வர்க்கத்தை நீங்கள் பழிப்பதன் அர்த்தம் என்ன? உங்கள் அம்மாயில்லாமல் உலகத்தில் நீங்கள் நேராவே Entryயா? அவதார புருஷனாக்கும்!”

பதில் பேச இயலாமல் எனக்கு வாயடைத்துவிடும்.

என் தாயை நான் அறியேன். தோய்ப்பதற்குத் துணியைச் சுருட்டிக் கொண்டு வாய்க்காலுக்குச் சென்றவள், உச்சிவேளை தாண்டியும் திரும்பவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/15&oldid=1125599" இலிருந்து மீள்விக்கப்பட்டது