28 O லா. ச. ராமாமிருதம்
அப்படியே பிய்த்துக் கொண்டவன்தான் நான்.
அனேகமாய் நாம் எல்லோருமே ஆணி மாண்டவ்யர்கள்தான். நாலுபேர் மெச்ச ('ஹி ஹி!! ஹி!!!) என் பேச்சின் பெருமையில் நான் நுகரும் இன்பம்தான் எனக்குப் பெரிசு, என் சொல்லில் கழுவேறிப் பிறர்படும் வேதனையை உண்மையில் நான் அறியேன்.
என் முறை வரும் வரை.
மாமா சுபாவத்தில் கெட்டவர் என்று இன்றும் எனக்குத் தோன்றவில்லை. அவர் வாயுள் வார்த்தை நிற்கவில்லை. என் செயல் என் கட்டில் நிற்கவில்லை. அவ்வளவுதான்.
ஆனால் வாழ்க்கையின் திருப்பங்கள் எல்லாம் அனேகமாய் இம்மாதிரி கடிவாளம் தெறித்த சமயங்கள்தான்.
பூகம்பத்தில், குஹையை மூடிய பாறைதானே உருண்டு விழுகிறது. நுழைவது புதையல் குஹையோ புலிக் குஹையோ. புதையல் கண்டவன் எல்லாம் தன்னால்தான் என்று பூமாலை சூட்டிக் கொள்கிறான். புலிக்கிரையானவன் வேளைமேல் பழி.
குருக்கள் வீட்டில் சொல்லிக் கொள்ளக்கூட நேரமில்லை. முதலில் அவர்களைப் பற்றி நினைக்க நேரமேது? வயல்பரப்பில் குறுக்கு வழியாக நான் விழுந்தடித்துக் கொண்டு வருகையிலேயே ரயில் குன்றை வளைக்க ஆரம்பித்து விட்டது. அந்தத் திருப்பத்தில்தான் அதன் வேகம் சற்றுத் தணியும். டிக்கட் இல்லாமல் ஏறுபவன் அங்குதான் தொத்திக் கொள்ள முடியும்.
நான் தொத்திக் கொண்டேன்.
பின்னால் வேணுமானால் ஆயிரம் நினைத்துக் கொள்ளலாம். பின்னால், அவ்வப்போது, சிறுகச் சிறுகத் தோன்றியதைக் கூட அப்பவே தோன்றியதாகச் சிந்தனையில் சேர்த்துக் கொண்டு, மாறாத நினைவுக்கு என்னைவிட