பக்கம்:அபிதா.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அபிதா O 41


ஆழமான குழியில் (இரண்டு முட்டை எண்ணெய் விட்டு ஒரு திரி ஏற்றலாம்), காலைச் சற்று சாய்த்த நடையில், அவன் மாமா சாயல் இவனுக்கும் அடித்தது.

“போகப் போக மாமாவால் ஒண்ணுமே முடியல்லே. மாமியும் முந்திண்டுட்டப்புறம் இருக்கிற ஒரு கண்ணும் அவிஞ்சு போச்சு. வீட்டுக்குள்ளேயே நடமாட்டம் சுவரைத் தொட்டுத் தூணைத் தொட்டுத் தரையைத் தடவித்தான். இந்தத் திருவேலநாதர் தலையிலே தண்ணியைக் கொட்டவும் முடியல்லேன்னா அவர், 'இந்தா சர்க்கரையா எண்ணிக்கோ’ன்னு மண்ணை அள்ளித்தான் வாயில் போடறார். எனக்கு ஆள் அனுப்பி என்னையே வீட்டோடு வெச்சுண்டார். வீட்டை விட்டு ஓடின பையன் முகம் எப்பவோ மறந்து போச்சு. வயசு ஆக ஆக, நினைவு கழலக் கழல, அவன் பேரும் மறந்து போச்சு, ஆனால் நீங்களே சொல்லுங்கோ, இந்த மாதிரிப் பிள்ளை நினைவு இருந்தும் ஒண்னுதான், மறந்தும் ஒண்ணுதான். ஆனால் உங்களைப் பத்தி அடிக்கடி சொல்லுவார்: 'நான் ஏதாவது பேசினால் அதைக் கேட்க அந்தப் பையனாவது இருந்தான். அவனும் காணோம்'னு.

“அவர் சொத்துக்கெல்லாம் நான்தான் வாரிசு. அவர் சொத்து என்ன, எவ்வளவுன்னு உங்களுக்குத் தெரியாததல்ல. வீடுமுழுவதும் ஒருகையால் வளைத்து உள்ளங்கையை விரித்துச் சிரித்தான். புகைந்தது. கீழ் வரிசையில் இரண்டு பற்கள் ஒட்டை.

“வசனம் சொல்லுவா, ‘பிராமணன் தலையில் சிவலிங்கத்தைக் கட்டின மாதிரி'ன்னு. மாமா அப்பட்டமா அப்படியே நிறைவேத்திப்பிட்டார். திருவேலநாதர் என் கழுத்துலே உட்காந்து நசுக்கிண்டிருக்கார். நான் மட்டும் தனியாயிருந்தேன்னா தனிக்காட்டு ராஜா. இங்கே எனக்கென்ன வேலை? பிடரிவரை முடி, தொப்புள் மட்டும் தாடி மீசை வளர்த்துண்டு, காஷாயம் உடுத்தி வடக்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/47&oldid=1126793" இலிருந்து மீள்விக்கப்பட்டது