பக்கம்:அபிதா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58 O லா. ச. ராமாமிருதம்


டம்டம்; குரங்குக்கு ஒண்ணு போனால் ஒண்ணு வந்தது. டம்டம். உன் தாத்தாவுக்குக் கண்ணு போச்சு பொண்ணு. போச்சு எல்லாம் போச்சு உசிர் போகல்லே டம்டம்’னு. ஏதோ சிரிப்பு வரமாதிரி சொல்லி முடிப்பார். சிரிப்பு கேக்காமல் வந்துடும். சிரிச்சப்புறம் சிரிச்சது தப்புன்னு தெரிஞ்சு பயமாயிருக்கும். ஆனால் ஏன் தப்புன்னு தெரியாது.

ஒரொரு சமயம் கண்ணிலிருந்து சதையை உரிச்சாப் போல், கண்ணே திடீர்னு தெரிஞ்சுட்டாப்போல் ஒரு திக்கா முறைச்சுப் பார்த்திண்டிருப்பார். அப்படி என்னத்தைப் பார்க்கறார்னு அந்தப் பக்கம் திரும்பிப் பார்ப்பேன். எனக்கு ஒண்னும் தெரியாது. ஆனால் அவருக்கு மாத்திரம் ஏதோ தெரியும்போல இருக்கு.

‘இப்போ தெரியறது' என்பார். திரும்பவும் அந்தத் திசையைப் பார்ப்பேன். அங்கு ஒண்ணுமில்லை.

“என்னது தாத்தா?'

‘இப்போ புரியறது.'

‘எது தாத்தா?'

‘ஏன் அப்படிக் கண்ணீரா உருகி, காற்றில் கற்பூரமா காணாமலே போயிட்டான்'னு.

‘ஏன் தாத்தா?'

'ஆனால் இப்போ புரிஞ்சு ப்ரயோஜனம்? புரிஞ்சதை சொல்லித்தான் ப்ரயோஜனம்? அப்பவே புரிஞ்சிருந்தாலும் அதனால் நடக்கப்போற காரியமும் இல்லை. ரகளைதான் கூட. நன்னா புரியறது. புரியறதுக்கு மேலே ப்ருவ் ஆறது; கிட்டிமுட்டிப் போனால் யாருக்கு யார்? நீ யாரோ நானாரோ யார் யாரோ ஆரிராரோ...ன்’னு கட்டைக் குரலில் தாலாட்டுப் பாட ஆரம்பித்து விடுவார்.

‘என்ன தாத்தா பாடறேள்! ஒண்ணுமே புரியல்லியே!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/64&oldid=1127252" இலிருந்து மீள்விக்கப்பட்டது