பக்கம்:அபிதா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 3

கொடுப்பனை இல்லாட்டாலும் போறது காலடியில் கல் தடுக்கினால் பிடிச்சுக்கமாட்டேளா? ஏன் சும்மாயிருக்கேள்? ‘ஆஹா அதுக்கென்ன?'ன்னு மெப்புக்கேனும் சொல்லக்கூட வாயடைச்சுப் போச்சா? புருஷாளே இப்படித்தான்”- என்று எங்கேனும் கொண்டு போய் முடித்து, மூக்கைச் சிந்தி, உறிஞ்சி, சிடுசிடுத்து அடுத்தாற் போல் சிரித்துத்தானே ஒய்ந்துவிடுவாள்.

“ஆமாம், நான் இப்படியெல்லாம் இல்லாட்டா நீங்கள் எனக்குக் கட்டியிருக்கும் அசட்டுப் பட்டத்தை எப்படி நிலை நாட்டிக்கறது?”

பாவம், அவள் ஆத்திரப்படுவதில் ஆச்சர்யமில்லை. நானாவது வியாபார நிமித்தமாய்ச் சுற்று வட்டாரம்போய் மீள்வதுண்டு. பிரயாணத்துக்கே அவளுக்கு வாய்ப்பில்லை. எங்களுக்கு உறவுகள், வேண்டியவர் வேண்டாதவர் எல்லோரும் எங்களைச்சுற்றியே இருந்து விட்டார்கள். அத்தனை பேரும் அவளைச் சார்ந்தவர்களே. பிழைப்பைத்தேடி தூர தேசம் வந்துவிட்ட இடத்தில் எனக்கென்று தனியாக தாயாதிகளை முளைக்க வைக்க முடியுமா?

கண்டதே காக்ஷி

கொண்டதே கோலம்

வந்ததே லாபம்

இன்று இப்படிப் போச்சா?

நாளை என்னவாகுமோ?

- என நேரத்தைக் காசாக எண்ணி எண்ணிக்கழித்த அந்நாளில் :

“அதோ அந்த வீட்டில் இன்று சமாராதனை”

“இந்தக் கோவிலில் உச்சி வேளைக்கு உண்டைக்கட்டி”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/9&oldid=1128095" இலிருந்து மீள்விக்கப்பட்டது