பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IX

சரபோஜி மகாராஜாவிடம் அபிராமிபட்டர் நிதானம் தவறி, "இன்று பௌர்ணமி திதி” என்று விடை கூறினார். அதைக் கேட்ட அம் மன்னர், சிலர் அவரைப் பற்றிக் குறை கூறியது உண்மை என்றுகருதிச் சிறிது கோபமடைந்து, "நீர் போய்வரலாம்" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

தம் வீட்டிற்கு வந்த அபிராமி பட்டர் தாம் வாய் சோர்ந்து கூறியதை நினைந்து, 'நம்மை ஆட்கொண்ட அபிராமவல்லியே இந்தப் பிழையினின்றும் காப்பாற்ற வேண்டும்' என்று எண்ணித் திருக்கோயிலுக்குச் சென்று ஒருவகை அரிகண்டம் பாடத் தொடங்கினராம். அம்பிகையின் சந்நிதியில் ஒரு குழி வெட்டி அதில் அக்கினியை மூட்டி அதற்குமேல் ஒரு விட்டத்திலிருந்து நூறு கயிறு களால் ஆகிய ஓர் உறியைத் தொங்கவிட்டார். பின்பு அதன்மேல் ஏறியிருந்து, "அம்பிகை எனக்குக் காட்சி தந்து எனக்கு வந்த பழியை மாற்றாவிடின் இந்த அக்கினியில் விழுந்து உயிர்விடுவேன்" என்று சங்கற்பம் செய்து கொண்டு, "உதிக்கின்ற”, என்று ஆரம்பித்து. இவ்வந்தாதியைப் பாடலானார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் அபிராமி அம்பிகையின் திருக்காட்சி பெறாமை காரணமாக உறியில் ஒவ்வொரு கயிறாக அரிந்து கொண்டு வந்தார். "விழிக்கே அருளுண்டு” என்ற 79 ஆவது பாடல் முடிந்தபோது மாலைக்காலம் வந்துவிட்டது. அப்பொழுது அபிராமியம்பிகை அவருக்குக் காட்சி கொடுத்தருளித்

தனது திருத்தோடு ஒன்றைக்கழற்றி வானமண்டலத்தில் வீச, அதுசென்று சந்திரனைப் போலச் சுடர் விடலாயிற்று. அம்பிகை பட்டரை நோக்கி, "அன்ப, நீ மன்னனிடம் கூறிய சொல் மெய்யாகும்படி செய்துவிட்டோம். இந்தப் பிரபந்தத்தை நீ நிறைவேற்றுவாயாக. இதனை அன்புடன் பாராயணம் செய்பவர்கள் நம் அருளை அடைவார்கள்” என்று கூறி மறைந்தருளினாள்.