பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆராய்ச்சி

திருக்கடவூர் என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரியின் தென்கரையில் மாயூரம்- தரங்கம்பாடி இருப்புப் பாதையில் இருக்கும் ஒரு தலம். இத்தலம் மூர்த்தி தலம் தீர்த்தம் என்னும் மூவகைச் சிறப்புக்களையும் உடையது. தேவர்களெல்லாம் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்து ஒரு குடத்தில் கொணர்ந்து இத்தலத்தில் வைத்தனர். மீட்டும் எடுக்க முயன்ற போது அக்குடமே லிங்காகாரம் ஆகிப் பதிந்து விளங்குவதைக் கண்டனர், பிறகு அமுதம் வேண்டித் திருமாலைத் தலைவராகக் கொண்டு சிவபிரானைப் பூசித்தனர். திருமால், அருச்சனை புரிந்து வழிபடுகையில் அம்பிகையை வணங்க மறந்தமையின் சிவபிரான் திருவருள் கிடைக்கவில்லை. இப்பிழையை உணர்ந்து சிவாலயத்தில் தனியே எழுந்தருளியுள்ள அபிராமியைப் பூசித்துப் பின்னர்ச் சிவபிரானையும் பூசிக்கவே, எம்பெருமான் எழுந்தருளி அமுதம் கிடைக்கும்படி திருவருள் புரிந்தனர். அமுத கலசமே திருவுருவாக எழுந்த - இறைவருக்கு அமிர்தகடேசர் என்ற திருநாமம் உண்டாயிற்று. கடம் (குடம்) அமைந்த தலமாதலின் இத் தலத்திற்குக் கடவூர் என்ற திருநாமம் அமைந்தது.

சிவஞானம் வேண்டிப் பூசித்த பிரமதேவருக்குச் சிவபிரான் மௌனத்தை அளித்தருள, அதிலிருந்து தோற்றிய வில்வ விருட்சமே இத்தலத்துக்குரிய விருட்சமாயிற்று. அதனால் வில்வாரணியம் என்ற திருநாமம் இத் தலத்திற்கு உண்டாயிற்று.

சிவபெருமான் வீரத் திருவிளையாடல் புரிந்த அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று இது. மார்க்கண்டேய முனிவரைக் கொல்ல வந்த காலனை உதைத்து அடியாருக்கு மரண பயமின்மையை வெளிப்படுத்திய சிறப் புடையது இது. மூவர் தேவாரமும் பெற்றது.