பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அபிராமி அந்தாதி

செய்யாள்: திருமகளாக உள்ளவள் எனலும் ஆம்: டாகினி, லாகினி. என்னும் திருநாமங்களோடு உள்ள அம்பிகையும் ஆம்.

வெளியாள் : கலைமகளாக உள்ளவள் என்பதும் பொருந்தும். ஆக்ஞை என்னும் ஆதாரத்தில் ஈரிதழ்த் தாமரையில் ஆறு முகத்தோடும் ஹாகினி என்னும் பெயரோடும் எழுந்தருளியிருக்கும் அம்பிகை வெண்ணிற முடையவளென்பர்;'சுக்ல வர்ணா' (லலிதா, 522).

பசும் பெண் கொடி; அநாகதத்திலுள்ள ராகினியுமாம்.

21

கொடியே இளவஞ்சிக் கொம்பே
எனக்குவம் பேபழுத்த
படியே மறையின் பரிமள
மேபனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய
தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்திங் கினிப்பிற
வாமல்வந் தாண்டுகொள்ளே.

(உரை) கொடி போன்றாய், இளைய வஞ்சிப் பூங்கொம்பை ஒத்தவளே, எனக்குக் காலமல்லாத காலத்திலே பழுத்த திருவுருவே, வேதமாகிய மலரின் மணம் போன்றாய், குளிர்ச்சியையுடைய பெரிய இமாசலத்தில் விளையாடும் பெண் யானையே, பிரமன் முதலிய தேவர்களைப் பெற்ற தாயே, அடியேன் இவ்வுலகத்தில் இறந்த பின்னர் மீண்டும் பிறவாமல் இருக்கும்படி அடியேன்பால் எழுந்தருளி வந்து அடியேனை ஆண்டு கொண்டருள் செய்வாயாக.

காலமல்லாத காலமென்றது தம் பக்குவம் இன்மையை, உணர்த்தியபடி; “வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு" (திருவாசகம்). பழுத்த படியே-கனிந்த பழத்தின் உருவமே எனலும் ஆம்: படி-உருவம். மறையினாற் -